திருமலை துறைமுகத்தை குறிவைக்கின்றது ரஸ்யா கடற்படை

சிறீலங்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் கடற்படை ஒத்துழைப்புக்கள் பலமடைந்துள்ளதாகவும், முதல் தடவையாக சிறீலங்கா கடற்படைத் தளபதி ரஸ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரஸ்யா பாதுகாப்பு அமைச்சின் அழைப்பினை அடுத்தே சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த மாதம் 27 ஆம் நாளில் இருந்து 30 ஆம் நாள் வரையிலும் ரஸ்யாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சிறீலங்கா கடற்படைத்தளபதி ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இது ரஸ்யாவின் மிகப்பெரும் தலையீடாகவே கருதப்படுகின்றது. ரஸ்யா கடற்படையின் மிகப்பெரும் கடற்படை அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காகவே சிறீலங்கா கடற்படை அதிகாரிகள் கொண்ட குழு தனது பயணத்தை மேற்கொண்டிருந்தது.

ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ராஸ்யாவிற்கு சார்பான நாடுகளான இந்தியா, ஈரான், சிறீலங்கா, பங்காளாதேஸ், மியான்மார் உட்பட 13 நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றியிருந்தனர்.

சிறீலங்கா கடற்படையினரை தனியாக சந்தித்த ரஸ்யா கடற்படைத் தளபதி பல தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு உறுதிவழங்கியுள்ளார்.

மேலும் ரஸ்யா கடற்படை அதிகாரிகள் திருமலைத் துறைமுகத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் சிறீலங்கா அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டுள்ளபோதும், இந்தியா அதனை தடுத்து ரஸ்யாவின் பக்கம் சிறீலங்காவை நகர்த்திவருகின்றது.