தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது அவசியம்; மீண்டும் வலியுறுத்துகின்றது ‘ரெலோ’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளியான ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பும் கௌரவிப்பும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:-

“நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரெலோ கடந்த தேர்தலில் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்த போதும் இந்த முறை அதற்கும் அதிகமாக மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஆகவே, கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள சரிவிற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆராய்வது மட்டுமல்லாமல் சுய பரிசொதனை செய்து கொள்வதும் அவசியமானது. அதுவே, எதிர்காலத்தில் இந்தகைய சரிவுகளிலிலருந்து மீண்டு வரக் கூடியதாக இருக்கும்.

மேலும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்ற கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். கூட்டமைப்பிற்குள் நிலையான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்படாததால் கூட்டமைப்பிற்குள் பல சர்ச்சைகளும் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை கடந்த தேர்தலை எடுத்துக் கொண்டால் கூட்டமைப்பில் நாங்கள் எதிரிகளுடன் போட்டியிட்டு அல்லது போராடியதை விடவும் கூட்டமைப்பிற்குள்ளே நாங்கள் போராடியது தான் அதிகம். இந்தநிலை மாற வேண்டுமாக இருந்தால் கட்சிப் பதிவு அவசியம்” என்றார்.