ஏமன் அரசு – ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே மோதல் – 28பேர் பலி

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் அரசு படைகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே, ஏமனின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றதில் 28பேர் பலியானதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஏமன் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள தகவலில், ஏமனில் வடகிழக்குப் பகுதியான அல் ஜாஃப் பகுதியில் ஏமன் அரசிற்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் 28பேர் பலியாகியுள்ளனர். இதில் 18 பேர் கிளர்ச்சியாளர்கள், 10பேர் அரச படையைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்தும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏமன் அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகின்றது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டு வருகின்றன.

மேலும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சவுதி அரேபியா ஏமனில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஏமன் அரசுடன் சவுதி அரசு நடத்தும் தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே கண்டித்துள்ளது.

போர் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.