தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரும் பிரச்சினையாக மேய்ச்சல் தரைக்காணி பிரச்சினை உருவெடுத்து காணப்படுகின்றது. தமிழர்கள் பல்வேறு பக்கத்திலும் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டுவரும் நிலையில், மேய்ச்சல் தரைக்காணிகள் மிக வேகமாக அபகரிக்கப்படும் நிலை நடைபெற்று வருகின்றன.

IMG 1734 தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் -	மட்டு.நகரான்

இன்று வடகிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுவரும் நிலையில் கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மேய்ச்சல் தரைக்காணிப் பிரச்சினை குறித்து பேசப்படுவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வருகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களை முன்னெடுப்பதற்காக மேய்ச்சல் தரைக்காணிகள் அபகரிக்கப்பட்டுவருகின்ற நிலையில், இந்த மேய்ச்சல் தரையினை பாதுகாப்பதற்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்குமான நிலை இன்று மிகவும் குறைவடைந்த நிலையில் இருப்பது கவலையான விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே அம்பாறை மாவட்டமும், திருகோணமலை மாவட்டமும் சிங்களமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தப்பிப்பிழைத்து வந்தது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக தமது இனப்பரம்பலை விஸ்தரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு,  இந்த மேய்ச்சல் தரைக்காணிகள் அபகரிக்கப்படும் நிலையினை காணமுடிகின்றது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டங்கள் 2015ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் தமிழ் கட்சிகள் வழங்கிய அழுத்தங்கள் மூலம் அத்துமீறிய குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதிகள் மேய்ச்சல் தரைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த பகுதிகள் பிடிக்கப்பட்டு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மேய்ச்சல் தரை காணிகள் சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் மேய்ச்சல் தரையில் கால்நடைகளை வளர்த்த கால்நடை பண்ணையாளர்கள் காடுகளுக்குள் கால்நடைகளை வளர்க்கும் நிலையேற்பட்டுள்ளது.

IMG 1836 தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் -	மட்டு.நகரான்

இப்பகுதியில் கால்நடைகளுக்கு உரிய – போதிய – உணவு  கிடைக்காத காரணத்தினால், தற்பொழுது ஒரு மாதத்திற்கு  மேலாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மாடுகள் இறந்து வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்துக்குள்  ஒவ்வொரு பண்ணையாளருக்கும்  சுமார் நான்கு இலட்சத்துக்கும்மேல் பெறுமதியான  20இற்கு மேற்பட்ட  பசுமாடுகள்  இறந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். கடந்த காலங்களில்  பாரியதொரு நிலப்பரப்பில்  மூன்று இலட்சத்துக்கு மேல் பசுமாடுகள்  வளர்த்து வந்த நிலையில், தற்பொழுது  காடுகளுக்குள்  பசு மாடுகளை வளர்க்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை, அத்துடன்  காடுகளுக்குள் பசுமாடுகள் மேய்வதற்கான போதிய  புல் வசதியில்லாமை என்ற இரண்டு பிரதான காரணங்களினால்  குறித்த பகுதியில்  தொடர்ச்சியாக பசு மாடுகள் இறந்து விடுவதாக தெரிவிக்கின்றார்கள்.

பசுக்களுக்கு உணவு இல்லாமை காரணமாக,  பசுக்களில் இருந்து பால் கறப்பதை  சுமார் மூன்று மாதத்துக்கு மேலாக ஒவ்வொரு பண்ணையாளர்களும் கைவிட்டுள்ளனர். இந்த நிலையில்  தங்கள் பல இலட்ச ரூபாய் பெறுமதியான மாடுகளை இழந்து வருவதுடன்,  தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமையிலும்  ஒவ்வொரு பண்ணையாளர்களும்  பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் விவசாய செய்கையின்போது கால்நடைகளை மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்  என அரசு அதிகாரிகள்,  அரசியல்வாதிகள்  தெரிவித்தாலும் இம்முறை  மேய்ச்சல் தரையிலிருந்து  அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் எங்களுடைய பசுமாடுகளை வெட்டுதல், துப்பாக்கியால் சுடுதல்,  மின்சாரத்தினால் மின்சார வேலி அமைத்து மாடுகளைக் கொல்லுதல்,  பண்ணையாளர்களை அடித்து விரட்டுதல்கள் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதன் காரணமாக  கால்நடை வளர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

IMG 2028 தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் -	மட்டு.நகரான்

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவிலும் சுமார் 1500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை வேலியிட்டு அடைக்கும் பணிகளை சிங்கள ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ள நிலையிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் பலமாக இருப்பதற்கு இந்த கால்நடை வளர்ப்பும் ஒரு காரணமாக இருந்து வருகின்றது. பொருளாதார வளம் இந்த கால்நடைகள் ஊடாக தமிழர்களிடம் பலம்பெறுவதன் காரணமாக அவற்றினை தடுக்கும் உபாயமாகவும் இந்த மேய்ச்சல் தரை அபகரிப்பு முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.

மேய்ச்சல் தரைக்காணிகள் பிடிக்கப்படுவது மட்டுமன்றி கால்நடைகளை கொல்லும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன்மூலம் தமிழர்களின் பொருளாதாரத்தினை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் தமிழர்களின் பொருளாதாரம் என்பது விவசாயம், மீன்பிடிக்கு அடுத்ததாக இந்த கால்நடை வளர்ப்பிலேயே தங்கியுள்ளது. அதிலும் இந்த கால்நடை வளர்ப்பானது மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளைக் கொண்டதாக பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தினை அழிப்பது, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பது என ஒரு கல்லில் இரண்டு மாங்காயை அடிக்கும் செயற்பாட்டினை பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றது.

IMG 1946 தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் -	மட்டு.நகரான்

இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினையை தடுத்து நிறுத்தி தமிழர்களின் பொருளாதாரத்தினையும், இருப்பினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லாத நிலைமையே இருந்துவருவதை காணமுடிகின்றது. தொடர்ச்சியான அழுத்தத்தினை வழங்கி பேரினவாத அரசுகளின் இவ்வாறான அபகரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஜனநாயக வழியான எந்தவித எதிர்ப்பினையும் பலமான முறையில் வெளிப்படுத்த வடகிழக்கில் உள்ள பொது அமைப்புகளும் அரசியல்வாதிகளும் தவறியுள்ளன.

அண்மையில் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட்டபோது முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக வழி போராட்டம் மீண்டும் அந்த நினைவுத்தூபியை நிர்மாணிக்கவைத்துள்ளது. ஆனால் மேய்ச்சல் தரை தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும், பொது, சிவில் அமைப்புகளும் மௌனிகளாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலைமையே இன்று வடகிழக்கில் பேரினவாதிகள் தமிழர்களின் இருப்பின் மீது கைவைப்பதற்கான நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது. மேய்ச்சல் தரை அபகரிக்கப்படும்போது அதற்கு எதிராக ஜனநாயக ரீதியில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று ஏனைய பகுதிகளில் கைவைப்பதற்கு சிங்கள தேசியம் சிந்தித்திருக்கும். ஆனால் அதனை செய்ய தவறியதே இன்று வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கான செயற்பாடாகும்.

இந்த மேய்ச்சல் தரைப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நீதிமன்றமாவது நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுமந்திரன் தலைமையிலான குழுவினர் மேய்ச்சல் தரைப்பகுதிக்கு சென்று அங்கு தமிழர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பில் பார்வையிட்டதுடன், அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனினும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று பண்ணையாளர்கள் சார்பில் மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது. அதன் மூலம் கால்நடை பண்ணையாளர்களுக்கு சிறிய அனுகூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இன்று மேய்ச்சல் தரை முற்றுமுழுதாக அபகரிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்கொண்டுள்ள இந்த மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு ஒன்றுபட்ட குரலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் வடகிழக்கு ரீதியாக முன்னெடுப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கான அழுத்தங்களை வழங்கமுடியும். வெறுமனே இந்த பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டும் நாங்கள் போராடுவதன் மூலமாக தீர்வினைப் பெற்றுவிடமுடியாது. அதேபோன்று இந்த பிரச்சினையின் தீவிரத்தினை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் ஏற்பாடுசெய்து நடாத்தும் போராட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து சொல்லிவிட்டு பின்னர் அந்த பிரச்சினைகளை மறந்தவர்களாக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமை மற்றும் இன்று தமிழர்களின் இருப்புக்கு எழுந்துள்ள சவால் நிலையினை உணர்ந்து அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழர்களின் ஜனநாயக வழியான போராட்டத்தினை தலைமைதாங்கி முன்நகர்த்த முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.