எமது ஜனநாயக உரிமையைத் தடுக்க எந்தச் சட்டத்திலும் இடமில்லை – சுமந்திரன்

எங்களுடைய ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இருந்தபோதும் அரச இயந்திரம், பொலிஸார் ஊடாக தடை உத்தரவு பெறுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் இன அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணி வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று பொத்துவிலில் ஆரம்பித்து மாலை மட்டக்களப்பு ­ தாழங்குடாவில் தரித்துள்ளது. முதல் நாள் பேரணியில் பங்கேற்றதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:­

“கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டியும் சமூகங்களுக்கிடையே முறுகல்கள் ஏற்படும் எனப் பொய்யாகக் காண்பித்தும் அரச தரப்பினர் சில நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளைப் பெற எத்தனிக்கின்றனர். கொழும்புத் துறைமுகத்தில் கிழக்கு முனையம் தொடர்பாக சில நாள்களாக பெரியதொரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கின்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை. பொலிஸாரும் எந்த நீதிமன்றத்தையும் நாடவில்லை.

ஆனால், எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறவேண்டும் என ஜனநாயக ரீதியாக அஹிம்சை வழியில் எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்றபோது அதற்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தெந்த எல்லைக்குள் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்படுகின்றதோ அதை மதிப்போம்; மீறமாட்டோம்.

தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக திரண்டு பெரும் எழுச்சியாக வடக்கை நோக்கிப் போகும்போது எவராலும் அதைத்தடுக்க முடியாது. விசேடமாக சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. என்றுமே இல்லாதவாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தடைகளை விதிக்க அரசு முனைகின்றது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. நாங்கள் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இன்றும் இதே இடத்திலிருந்து பேரணியைத் தொடருவோம். அனைவருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவை” ­ என்றார்.