தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியின் வரலாறு திருத்தி எழுதப்படும் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்திற்காகவே இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும், அமைதிப் படையை அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தி தமிழர்களின் தாய் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு ஒருநாள் திருத்தி எழுதப்படும் என்றும் சீமான் கூறியிருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர்களை அவதூறாகப் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் போது, நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இரத்துச் செய்ய வேண்டும் எனவும், சிங்கள இராணுவத்தை விட விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை அதிகம் கொன்றுள்ளனர் எனவும் தனது இனவாதக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவரது கருத்திற்கு எதிர்க் கருத்தை இன்று(14) சீமான் சென்னை விமான நிலையத்தில் சந்தித்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், விக்கிரவாண்டி தொகுதியில் ராஜீவ் காந்தி தொடர்பாக தான் பேசிய பேச்சை வாபஸ் பெறமாட்டேன் என்றும், ராஜீவ் காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாக பேசிக் கொண்டு, விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறிக்கொண்டு, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அவமானம், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கையில் உள்ள குழந்தைகளைக்கூட பயங்கரவாதிகளாகப் பார்க்கின்றனர்.

இந்த தடையால் சர்வதேச அமைப்பிடம் சென்று நீதி கேட்கும் போது, தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதநிதிகளாக பார்க்கின்றனர். 7பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன.

ராஜீவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படத்தை பச்சை குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலமும் வரும்.

விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்று சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் கொல்லவில்லை என்றால் நம்பி விட்டார்களா? ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டதாகக் கூறித்தான் போர் செய்து இலட்சக் கணக்கான மக்களைக் கொன்றார்கள்.

இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசு தான். காங்கிரசுடன் திமுக நின்றதை யாராவத மறுக்க முடியுமா? சத்தியத்தின் பக்கம் தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இராணுவப் பிடியில் இருப்பதாக தகவல் சொன்ன போது, பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சொன்னது யார், அதே காயமும் வன்மமும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது.  10 ஆண்டுகளாக அநீதிக்கான நீதியை பெறக்கூட முடியவில்லை. அவ்வளவு தடை, இடையூறு. ஒரு மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தியுள்ளனர். என்மீது இதுபோன்ற இலட்சக் கணக்கான வழக்குகள் இருக்கின்றது. அதற்காக ராஜீவ் காந்தி குறித்துப் பேசியதை வாபஸ் பெறமாட்டேன் என்று சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.