தமிழக பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து- பலர் உயிரிழப்பு

தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 11 பேர் பலியானதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விருதுநகர்  பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட  வெடி விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு  இரங்கல் தெரிவித்துள்ள  தமிழக முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு ரூ.1 இலட்சம் சிகிச்சை செலவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

அதே போல் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவங்கள் குறித்து தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.