தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரி; கடத்தல்களுடன் தொடர்புபட்டவரா?

இந்தியாவின் – தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதானவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும், அவருக்கும் கடத்தல் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளனவா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இராமேஸ்வரம் கடலோர காவல் படையினருக்கு கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறவுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பொலிஸார் விசாரிக்க முயன்றனர்.

அப்போது அந்த நபர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கையின் மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க என்பது விசாரணையில் தெரிவந்தது. அவர், கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு பணியாற்றி வருபவர் என்பது தெரியவந்தது.

இவர், தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து கண்ணாடி இழை படகு மூலமாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து விளக்க மறியலில் வைத்துத் தமிழக உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.