அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்தத் தயார் இல்லை; கிளிநொச்சியில் சிவாஜிலிங்கம்

அதியுச்ச சமஷ்டியைப் பெறாத இலங்கைக்குள் எமக்குத் தீர்வு இல்லை. எனவே, தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேசத் தயாரில்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கிளிநொச்சியில் நேற்று நடத்திய மக்கள்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. அது இருக்கப்போகின்றதா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. தங்களின் இரண்டாம் தரப்பு என்று சொல்லக்கூடிய தலைமைகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு.

இதனால், அதனை இல்லாமல் செய்வது கஷ்டமாக இருக்கும். ஆனால், அங்கு இனவாத கூச்சல்கள் எழுந்துகொண் டிருக் கின்றன. இதன் மத்தியில்தான் இனப்பிரச்னைக்கான புதிய அரசியல் தீர்வை – எங்களுடைய மக்கள் விரும்பக்கூடிய வகையில், வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் ஆளக்கூடிய ஓர் ஆட்சியை, அதியுச்ச சமஷ்டியை பெறாதநிலையில் இலங்கைக்குள் எமக்கு தீர்வு கிடைக்காது. எனவே அரசாங்கத்துடன் நேரடியாக பேச விருப்பமில்லை. வெளிநாட்டு மத்தியஸ்தர்கள் ஊடாகவே பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும்” என்றார்.