தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள்  முக கவசம் இன்றி  வெளியே செல்ல அமெரிக்காவில்  அனுமதி

அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  வெளியிட்டுள்ள தகவலின் படி,

அமெரிக்க மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் இதுவரையில் குறைந்தது  முதல் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக  அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுடன், வெளிப்புற உணவு விடுதியில் ஒன்றாக உணவருந்தும்பொழுதும், முக கவசம் அணியாமல் இருப்பது முழு அளவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதுகாப்புமிக்க ஒன்று என்றே எடுத்து கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடுகளால் முக கவசம் அணியாமல் அமெரிக்க மக்கள் வெளியே செல்ல கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பிடன்  கூறும் போது,

தடுப்பூசிகளை நிர்வகிப்பதில் “அதிர்ச்சியூட்டும் முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளது என்றும் கடுமையான முக கவசம் பரிந்துரைகளை இப்போது தளர்த்தபடும்.

இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் குறிப்பாக  இளமையாக இருந்தால், அல்லது இது தேவையில்லை என்று நினைத்தால், தடுப்பூசி போட இது மற்றொரு சிறந்த காரணம் ஆகும்” என்றார்.