அதிகரிக்கும் கொரோனா -ஐ.நாவின் உதவியை நிராகரித்த இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டடெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

“இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா முன்வந்தது. எனினும் தங்களிடம் போதுமான அளவு உபகரணங்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் ஐ.நா.வின் உதவி தேவைப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

அதற்காக தனது உதவியை ஐ.நா. திரும்பப் பெறப்போவதில்லை. இந்த உதவியைப் பெறுவதற்கு எப்போதும் வேண்டுமானாலும் ஐ.நா.வை இந்தியா அணுகலாம். தன்னால் முடிந்த வழிகளில் இந்தியாவுக்கு உதவ ஐ.நா. தயாராக இருக்கிறது.

இந்தியாவில் நிலவும் கொரோனா சூழல் தொடா்பாக ஐ.நா. தலைமைச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் தனிச் செயலா் மரியா லூயிஸா இபெய்ரு வையட்டி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தியுடன் தொடா்பில் இருந்து வருகிறார். ஐ.நா. அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்து வருகின்றனா்.

அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்று வீழ்த்தப்பட வேண்டும். அதுவரை இந்த பிரச்னையில் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து தீா்வு ஏற்படாது. தற்போதைய நிலையில், அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்”  என்றார்