ட்ரம்ப் – கிம் சந்திப்பு -அடுத்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய எல்லையில் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் ஐ சந்தித்துப் பேசினார். இதன் மூலம் வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார்.

அணு ஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா மீது, உலக நாடுகள் பொருளாதாரத்தடை விதித்திருந்தன. தென்கொரியாவுடனான  போரின் பின்னர் அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தது.

அண்மையில் சமாதானப் பேச்சுக்கு வடகொரியா இணங்கியது. இதற்கான முதல் படியாக தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன் அவர்களை அந்நாட்டு எல்லைக்கே சென்று கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப்  பெற்றது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ட் வடகொரிய  அதிபரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.  இச்சந்திப்பின் பின்னர் அணு ஆயுத உற்பத்தியை வடகொரியா நிறுத்தவுள்ளதாக அறிவித்தது.

இவ்வாறிருக்க, வடகொரிய – தென்கொரிய எல்லையில் உள்ள Panmunjom கிராமத்தில் அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் கிம்ஜாங் சந்திப்பு நிகழ்ந்தது. இதனையடுத்து வடகொரியாவிற்குள் காலடி வைத்தார் ட்ரம்ப்.  இதன் மூலம் வடகொரியாவிற்குள் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றார். அவரை எல்லைக்கே சென்று வரவேற்ற கிம் ஜாங் உன், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டார். தான் இப்படியான சந்திப்பொன்றை ஒருபோதும் எண்ணியதில்லை என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ட்ரம் வடகொரிய எல்லைக்குள் கால்பதிக்க கிடைத்தமை ஒரு வரப்பிரசாதம் எனக் குறிப்பிட்டார். அதே போல், கிம் ஜான் உன்னை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ட்ரம்ட் அழைப்பு விடுத்தார்.  50 நிமிடங்கள் வரை இச்சந்திப்பு நடைபெற்றது.

Trum kim N korea ட்ரம்ப் – கிம் சந்திப்பு -அடுத்தது என்ன?முன்னதாக தென்கொரிய அதிபர் மூனே ஜே இன் ஐ தென்கொரிய எல்லையில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு மையத்தையும் பார்வையிட்டார். அப்போது ட்ரம்ப், சிங்கப்புரில் வடகொரிய அதிபரை முதன்முறையாக சந்திக்கும் முன்னர் பல்வேறு எதிரான விமர்சனங்கள் தனக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஐ சந்திப்பது குறித்துப் பேசிய அவர், ஆபத்துக்கள் நீங்கி, தீர்வுகளை நோக்கிய பாதையில் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜப்பானில் நடந்து முடிந்த G 20 நாடுகள் உச்சி மாநாட்டில் வடகொரிய பிரச்சினை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. வடகொரிய அணு ஆயுதங்களால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து  G 20 நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

இச்சந்திப்பு வடகொரியாவை அணுஆயுதங்களை கைவிடும் முடிவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.