ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள் என்பதுடன், இதில் 12 நாடுகள் இம்முறை பேரவையில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றன.

இணை அநுசரணையாக அல்லது மேலதிக இணை அநுசரணையாக இந்த 40 நாடுகள் பிரேரணையில் கையொப்பமிடவுள்ளன.

மார்ச் 22 ஆம் திகதி இந்தப் பிரேரணை மீதான வாக்களிப்பு இடம்பெறும். பிரேரணையையும், அதன் உள்ளடக்கத்தையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை குறித்து எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேரவையின் அங்கத்தவ நாடுகளைக் கேட்டிருந்தார். இருந்தபோதிலும் பிரேரணைக்கு ஆதரவு அதிகரித்து வருதை ஜெனிவா தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கொரோனாவினால் மரணமடைபவர்களின் உடல்களை தகனம் செய்வதைக் கட்டாயமாக்கியிருந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்று அடக்கம் செய்வதற்கான அனுமதியையும் அரசாங்கம் தற்போது வழங்கியிருக்கின்றபோதிலும், பிரேரணையில் அந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றத்தைச் செய்வதற்கு இணைத் தலைமை நாடுகள் மறுத்துவிட்டன.

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அதனை மாற்றுவதற்கு இணைத் தலைமை நாடுகள் மறுத்ததாகக் கருதப்படுகின்றது.

தற்போதைய நிலையில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, பிலிப்பைன்ஸ், வெனிசூலா ஆகிய நாடுகள் இலங்கையை ஆதரிக்கின்றன.