ஆதாரங்களை பாதுகாக்கும் பொறிமுறை – திட்டவட்டாக நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம்

போர்க் குற்றங்கள் குறித்த எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவ்வாறான பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்காது. அனுமதியளிக்காது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெளிப்படையாக இதனை நிராகரிக்கின்றோம். இது மனித உரிமை பேரவையின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சி;ன் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.

நியாயமற்ற பக்கச்சார்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்கி;ன்றது என குறிப்பிட்டுள்ள அவர் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை நாங்கள் ஏற்கனவே இரண்டு தடவை நிராகரித்துள்ளோம். இந்த தீர்மானம் அதனை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்துமாறு வேண்டுகோள் விடுப்பது குறித்து நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து தகவல்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது என்பதற்காக இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் விஷேட பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பிரிட்டன் தலைமையிலான நாடுகள் தயாரித்துள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.