பௌத்த பிக்கு என்பதால் நான் தலை குனிந்து வர வேண்டுமா? மனோ கணேசன் கேள்வி

கொழும்பு – கிரான்ட்பாஸ் – கஜீமா தோட்டத்தில் நேற்று முன் தினம் அதிகாலை பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பால சுரேஷ், மஞ்சுளா, அமைப்பாளர் பத்மநாதன் ஆகியோரும் சென்றிருந்த நிலையில் பக்கத்து விகாரையின் தேரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை ஊடக மொன்று “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என செய்தி வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் காட்டமான முறையில் பதிவிடல் ஒன்றினை செய்துள்ளார்.

“அதிகாலையில் வட கொழும்பில் தீப்பிடித்த குடிசைகளை பார்க்கப்போன போது, அங்கிருந்த பக்கத்துவிகாரையின் பிக்கு என்னோடு வாக்குவாதப்பட்டார். அவருடன் நாலு பேர் நின்றார்கள். தேரரும், அந்நபர்களும் ஆளும் மொட்டு கட்சிகாரர்கள். அதுதான் சண்டை. பௌத்த தேரர் என்றால் எனக்கென்ன?

நமது ஆட்சியில் கட்டப்பட்ட மாடி வீட்டு திட்டத்தில், காலியாக பல வீடுகளை இவர்கள் மக்களுக்கு கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். அதை சுட்டிகாட்டியதும் அவர்களுக்கு பொறுக்கலை. இதை “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தியில் காட்டுகிறார்கள். அதை எடுத்து ஒரு தமிழ் இணையத்தளமும் செய்தி போடுகிறது. அட போங்கடா…, பௌத்த பிக்கு என்பதால் நான் தலை குனிந்து மூடிக்கொண்டுவரவேண்டுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.