ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது – பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்

1983ஆம் ஆண்டு கலவரத்தில் 471 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் உள்ளன. ஆனால், அதனைவிட இறப்புகள் அதிகமாகும். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். அத்துடன், பல தமிழ் கடைகள் சூறையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகமும் எரிக்கப்பட்டது.கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தை வெளியிட்டார்.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியை கைப்பற்றியதும் 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்தே அந்த அரசியலமைப்புக் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்தே எமது நாட்டில் இன முரண்பாடுகள் ஆரம்பமானது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதி எடுத்திருந்த நடவடிக்கைகளால், சில நாட்களிலே பாதுகாப்புத் துறையின் பங்களிப்புடன் அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஆனால், அன்று ஜே.ஆர். அதனைச் செய்யவில்லை. இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு குண்டர்களை அனுப்பி வன்முறைகளை நாடுமுழுவது தோற்றுவித்தனர். 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் பின்னர்தான் ஜே.வி.பிஆயுதம் தூக்கியது.

 1988,1989களில் இதனால் பாரிய அழிவுகளை சந்தித்தோம். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடந்ததென அனைவருக்கும் நினைவிருக்கும். வாக்குப் பெட்டிகளும் அன்று சூறையாடப்பட்டிருந்தன. அதனால் நாடு யுத்தத்தை நோக்கி நகர்ந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.