அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இந்தியாவிடம் கையேந்துவது வெட்கக்கேடானது – பிரபா

ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவாடிவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்கு முன்நின்றுவிட்டு இன்று இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அறிக்கைவிடுவது கேவலமான விடயமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

அதேபோல் நான் மதிக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஐ.தே.க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று கூறியிருப்பது அவர்களது கையாலாகாத்தனத்தையும் அரசியல் நாடகத்தை ஆரம்பித்திருப்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் உறவாடிவிட்டு மூன்று முறை அவர்களை ஆபத்தான கண்டத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அதற்கு பிரதிபலனாக எதையும் பெற்றுக் கொள்ளாமல் இன்று எமது இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் கையேந்தி நிற்பதனையும் அது போல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவது சம்பந்தமாக எதிர்ப்பு நிலவரத்தை கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் வருவதை முன்நின்று மக்களை ஏமாற்றுவதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையாகவே நானும் எனது வன்னி மாவட்ட மக்களும் பார்க்கின்றோம்.

அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் கூட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கண்ணை மூடிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து விட்டு இப்பொழுது மீள்பரிசீலனை செய்வதாக அறிக்கை விட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தேர்தல் நாடகம் ஆடுவதாக மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இவ்வாறான கபட நாடகம் எதிர்வரும் தேர்தலில் எடுபடாது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்கப்போகின்றார்கள். இருப்பினும் ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனையாகவும் அரசாங்கத்தின் ஊடாக தமது வரப்பிரசாதங்களை உறுதி செய்வதற்காகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப முற்படுகின்றார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தூக்கிய கைகளை கீழே இறக்குவதற்கு முன் இவ்வாறன அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பேசி நடாத்தும் நாடகமாகும்.

கம்பெரலிய திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு? என்பதனை இவர்கள் மக்கள் முன் வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவர்கள் பெற்றுக் கொண்ட கமிஷன் பற்றியகசிந்து வரும் உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். யுத்தத்திற்குப் பின் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வரும் வடகிழக்கு சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முகத்திரை களையப்பட வேண்டும். எதிர்காலத்தில் யாருடைய ஆட்சி ஏற்பட்டாலும் கூட அதில் நாம் பங்காளியாக இருப்போம்.

அதனூடாக நான் வன்னி மாவட்ட மக்களின் தேவையினை செய்து முடிப்பேன். வெறும் அரசியல் இலாபத்திற்காகவோ இவர்களைப் போன்று சொந்த இலாபத்திற்காகவோ சோரம் போகத் தயாராக இல்லை. மாறாக நேர்மையான 24 மணி நேர மக்கள் சந்திப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து முடிப்பேன் என உறுதியளிக்கின்றேன் எனவும் பிரபா கணேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்