‘சீரம்’ தடுப்பூசிகளைத் திரும்பப்பெற தென் ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. அதேபோல் பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தடுப்பூசி ஒன்றைத் தயாரித்தது.

இதையடுத்து இந்தியாவில், அந்த தடுப்பூசியை ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில், சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்தது.

அதன்பிறகு சீரம் நிறுவனத்தின் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை தென் ஆப்பிரிக்கா பெற்றுக்கொண்டது.  தற்போது தங்கள் நாட்டில் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த புதியவகை கொரோனாவிற்கு எதிராக, சீரம் தடுப்பூசிகள் குறைந்த அளவு பாதுகாப்பே வழங்குவதாகக் கூறி, அத்தடுப்பூசிகளை செலுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சீரம் நிறுவனத்திடம், தாங்கள் வாங்கிய தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது.