திருகோணமலை எரிபொருள் தாங்கி  இந்தியாவிடம் இருந்து  மீளப்பெறப்படும் – அமைச்சர் கம்மன்பில

“திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும்” என  அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொலன்னாவைப் பகுதியில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “திருகோணமலை எரிபொருள் தாங்கி தொடர்பால் பல பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவருடன் இடம்பெற்ற பேச்சு வெற்றியடைந்துள்ளது.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் அனைத்தும் வெகுவிரைவில் இலங்கை வசமாகும். எரிபொருள் தாங்கியை இலங்கை வசமாக்க தொழிற்சங்கத்தினர், அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சு முன்னெடுக்கப்பட்டு ஒரு தீர்வு பொறிமுறை வகுக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பான பேச்சில் 2017ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கி குறித்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் புறம் தள்ளி புதிய அணுகுமுறையைக் கையாள்வதாக இந்தியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு முழுமையாக பயன்பெறாதுபோன திருகோணமலை எரிபொருள் தாங்கி 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பெறுமதி மிக்க இந்தத் தேசிய வளத்தை வெகுவிரைவில் சொந்தமாக்கிக் கொள்வோம் என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

திருகோணமலை கடல் மார்க்கத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்கள் இந்தியாவுடன் தொடர்புப்பட்டுள்ளன. ஆகவே, எரிபொருள் சார் வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக அதிக தேசிய வருவாயை குறுகிய காலத்தில் ஈட்டிக்கொள்ள முடியும்.

85 வருட காலத்துக்கும் அதிகமான பழமை வாய்ந்த திருகோணமலை எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததியினருக்கு இந்தத் தேசிய வளத்தை சிறந்த முறையில் கையளிப்போம் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.