சீனாவில் மீண்டும் கொரோனா; பெய்ஜிங்கில் சந்தைகள் மூடப்பட்டன.

வூஹானில் ஏப்ரல் மாதத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தற்போது பெய்ஜிங்கில் தலைகாட்டுகிறது, சீனாவில் மீண்டும் 66 புதிய கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 57 புதிதாக உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாகும். இதில் 38 பேருக்கு உள்நாட்டு தொடர்பின் மூலம் தொற்றியுள்ளது என்று சீனா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமையன்று கரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத 9 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் அங்கு பீதி கிளம்பியுள்ளது.

இப்போதைக்கு 103 பேர் கரோனா அறிகுறிகள் இல்லாத ஆனால் தொற்றுடையோர் தனிமை முகாமில் உள்ளனர்.

அமைதியாகக் கரோனா வைரஸ் கிருமியை பரப்புபவர்கள் என்று கூறப்படும் நோய் அறிகுறியற்றவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை கட்டு என்று எதுவும் இருக்காது.

உள்நாட்டுத் தொடர்புகள் மூலம் கொரோனா தொற்றிய 38 பேர்களில் 36 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள். 2 பேர் லியானிங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்

பெய்ஜிங்கில் கடந்த சில நாட்களில் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்துந்ள்ளனர்.

சனிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்த உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 83,112 ஆக அதிகரித்துள்ளது, இதில் இன்னும் சிகிச்சையில் இருப்பவர்கள் 129 பேரும் அடங்குவர்.

புதிய தொற்றுகளால் பெய்ஜிங்கில் சந்தைகள் மூடப்பட்டன. ஷின்ஃபாடி மொத்த விற்பனை உணவுச்சந்தை மூடப்பட்டது.

ஷின்ஃபாடி சந்தையில் சேகரிக்கப்பட்ட சுற்றுசூழல் மாதிரிகளிலும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான 6 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்றவுடன் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை துரித கதியில் நடத்தப்பட்டது.