சிறையிலிருந்து வெளிவர இருக்கும் சசிகலா அ.தி.மு.கவில் இணைவாரா – முதல்வர் பழனிசாமி கருத்து

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் குறித்தோ அல்லது அரசியல் ரீதியாகவோ எதையும் பிரதமரிடம் பேசவில்லை என்றார்.  அதே நேரம் சிறையிலிருந்து வெளிவர இருக்கும் சசிகலா அ.தி.மு.கவுடன் இணைய “100% வாய்ப்பே இல்லை” என்றும்   சசிகலா அ.தி.மு.க கட்சியிலேயே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்புக்குறித்து மேலும் அவர் கூறுகையில், “காவிரி குண்டாறு இணைப்புத் திண்ட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ இரயில் திட்டம் நிறைவடைந்தது. அதே போல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய்த் திட்டமும் நிறைவடைந்துவிட்டது. அதைத் துவக்கி வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார்.