சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு பயணத்தடை விதித்தது அமெரிக்கா

சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்லா மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு பயணத்தடை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சில்வா அதிகளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றவாளியான சவீந்திர சில்வாவை சிறீலங்கா அரசு இராணுவத்தளபதியாக நியமித்தது தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

முழுமையான அறிக்கை வருமாறு:

ஊடக அறிக்கை
மைக்கல் ஆர் பொம்பியோ – அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்
பெப்ரவரி 14, 2020

2009 ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது கட்டளைப் பொறுப்பிற்கு ஊடாக இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணியினால் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவருடைய தொடர்பு பற்றிய நம்பத்தகுந்த தகவல்களின் காரணமாக அமெரிக்க அரசானது இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் உப பிரதானியாகவும் உள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினை வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்புபட்ட ஒதுக்கீட்டு நிகழ்ச்சிதிட்டங்களின் சட்டத்தின் அரச திணைக்களத்தின் 7031(ஊ) பிரிவின் கீழ் கண்டித்துள்ளது.

வெளிநாட்டு அதிகாரிகள் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் அல்லது பாரிய மோசடிகளில் தொடர்புபட்டதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்புபட்ட நிதியமைப்பு நிகழ்ச்சிதிட்டங்களின் சட்டத்தின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 7031(ஊ) கீழ் குறித்த நபர்கள் மற்றும் அவர்களது நேரடிக் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

ஐக்கிய நாடுகளாலும் வேறு அமைப்புக்களாலும் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு எதிரான பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை மற்றும் நம்கத்தகுந்தவை. இவர் மீதான கண்டன நடவடிக்கையானது இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நாம் மனித உரிமைகள் மீது கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் மனித உரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்களுக்கு தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுதல் மீதுள்ள எமது கரிசனையையும் அத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான எமது ஆதரவினையும் கோடிட்டுக்காட்டுகின்றது.

மனித உரிமைகளை மேம்படுத்துமாறும் , போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பான நபர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துமாறும் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அதன் உறுதிப்பாட்டையும் கொண்டிருக்குமாறும் நாங்கள் இலங்கையினைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்துடனான எமது பங்குரிமையையும் இலங்கை மக்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் நீண்டகால ஜனநாயகப் பாரம்பரியத்தையும் ஆழமான மதிக்கின்றோம். அமெரிக்க அரசானது இலங்கையுடன் இருதரப்பு நல்லுறவினை தொடர்ந்தும் பேணிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் வெளிவரும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு பாதுகாப்புபடைகள் மீளமைப்புச் செய்து உதவுவதற்கும் உறுதியுடன் இருக்கின்றது. மனித உரிமைகளுக்கான மதிப்பினை வலியுறுத்தும் அதேவேளையில் அடிப்படைக்கூறுகளான பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகள் என்ற வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடரும்.

எப்போது நடைபெற்றது அல்லது யார் அதனைச் செய்தார்கள் என்றில்லாமல் உலகில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை இல்லாது செய்ய அமரிக்காவானது தனது எல்லா வழிமுறைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்தும். இன்றைய நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு அதரவுவழங்கும் எமது ஈடுபாட்டை கோடிட்டுக்காட்டுவதுடன் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை பொறுப்புக்கூறலுக்கும் உட்படுத்துவதை ஊக்குவிப்பதையும் அமைதியான மற்றும் நிலையான வளமான இலங்கைக்கு ஆதரவான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதையும் கோடிட்டுக்காட்டுகினறது.