சஜித்திற்காக ரணிலிடம் பரிந்துரை செய்த சம்பந்தன்

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசா வருவதற்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித்திற்கு வழிவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை துறந்தார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றார். இப்போது எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது.

இரா. சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவிக்கும் போது, சஜித் பிரேமதாசா கடந்த ஜனாதிபதி தேர்தலில் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவராவார். நாம் தேர்தலில் யாரையும் ஆழமாக அதரிக்கவில்லை. இரு தரப்பினரிடமும் தொடர்புகளைப் பேணி வந்தோம்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். இதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எமது எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எனவே சஜித் பிரேமதாசாவிற்கு வழிவிடவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த வேண்டுகோள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றைய தினம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படி இன்னொரு கடிதமும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், தாம் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும், இன்று சஜித் பிரேமதாசாவை சந்தித்து கலந்துரையாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்னும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அரசாங்கம் முடிவு செய்யவில்லை.