மாவீரர் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களை பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர்

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளையொட்டி வல்வெட்டித்துறை தீருவில் நகரசபை பொது மைதானத்தில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டோரை அச்சுறுத்தும் வகையில் பொலிசார் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த துப்புரவுப் பணி வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது. வல்வெட்டித்துறை நகர சபைக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இந்த துப்புரவுப் பணியை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார்.  இந்தப் பணி நகரசபைத் தவிசாளரின் முடிவிற்கமையவே மேற்கொள்ளப்படுவதாகவும், அதை தடுக்க முடியாது என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை பொது மைதானத்திற்குச் சென்ற பொலிசார், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டோரை தனித்தனியே வீடியோ பதிவு செய்து வருகின்றனர். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரிலேயே தாம் வீடியோ பதிவை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.