கோத்தபயாவின் விஜயத்தை எதிர்த்து டெல்லியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிராக இந்தியத் தலைநகர் டெல்லியில் நவம்பர் 28ஆம் திகதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவிற்கு ஆளான ஈழத் தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா என்று நாம் பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக் கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்து ஈவிரக்கம் அற்ற முறையில் தமிழர்களை படுகொலை செய்த கோத்தபயா ராஜபக்ஸ இப்போது அதிபராகியிருக்கின்றார்.

முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே இராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். சிங்களவர்களால் தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் வலம் வரவேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார்.

தமிழ் ஈழம் சிங்களவர்களின் இராணுவக் கூடாரம் ஆகி விட்டது. காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன? என்ற வேதனை எம்மை வாட்டுகின்றது.

இந்தியாவில் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்திய மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வாழ்த்தும் சொல்லி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வருக என அழைப்பும் விடுத்திருக்கின்றது.  மகிந்த ராஜபக்ஸ காஞ்சிக்கு வந்த போது, 1500 கிலோ மீற்றர் கடந்து சென்று, கறுப்புக் கொடி காட்டிக் கைதானோம்.

2014இல் நரேந்திர மோடி பதவியேற்பிற்கு மகிந்த ராஜபக்ஸ வந்த போது, தலைநகர் டெல்லியில் கறுப்புக் கொடி காட்டிக் கைதானோம். நமக்கு உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. நம் நரம்பகள் மரத்துப் போய்விடவில்லை.

தமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகின்ற நவம்பர் 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புதுடெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத் தமிழ இனக்கொலைகாரனே, இந்தியாவிற்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம். கழகக் கண்மணிகள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், டெல்லிக்கு வாருங்கள்.

குண்டடிபட்டுக் கொத்துக் கொத்தாக மடிந்து போன ஈழத் தமிழர்களக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம். கழகக் கண்மணிகள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற அறப் போராட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தோள்கொடுத்துத் துணை நிற்க வேண்டும் என இரு கரம் கூப்பி, பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.