செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு சிக்கலா?

செவ்வாய்க் கிரகம் சூரியனிலிருந்து நான்காவது கிரகமாக உள்ளது. இது சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு கோளாகும். குறிப்பாக சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2ஆவது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது.

செவ்வாய்க் கிரகத்தின் மேற்புறத்தில் காணப்படும் இரும்பு ஒக்ஸைட் காரணமாகவே இக்கோள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. எனினும் செவ்வாய்க் கிரகத்திற்கு எப்படியாவது மனிதனை அனுப்பிவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதிலும் நாசா அமைப்பு எதிர்வரும் 2035ஆம் ஆண்டளவில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நம்புகின்றனர்.

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்தன என்பதற்கான சான்றாக மேற்பரப்பிற்கு கீழ் உள்ள நீர் உட்பட பல ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால், படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா என்னும் நாட்பட்ட மனநோய்க்கு ஆளாகக்கூடும் என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்திற்கு போட்டி போட்டு பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் பெயர்களை வரலாற்றில் செதுக்குவார்கள். ஆனால் இதற்கு முன்பு யாரும் எதிர்கொள்ளாத சுகாதார அபாயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

முக்கிய விடயம் என்னவென்றால் உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனித தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிகளவு கதிர்வீச்சு இங்கு உள்ளது. இதை பார்க்கவோ அல்லது உணரவோ முடியாது. இந்த அபாயகரமான விண்வெளி கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன், கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் தோற்றுவிக்கும் எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக மனித உடலின் எந்தப் பகுதியும் கதிர்வீச்சுப் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் எனவும், புற்றுநோய் தவிர இருதயப் பிரச்சினைகள், நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்ட எண்ணற்ற உடல்நல பாதிப்புகள் பொதுவாக வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனாலும் கதிர்வீச்சிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கான வழிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தடுப்பதற்கான புதிய பொருட்கள், புதுமையான மருந்து அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.