கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு  இந்திய அரசு உத்தரவு

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை ‘இந்தியத் திரிபு’ (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு ‘B.1.617’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை ‘இந்தியத் திரிபு’ என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்டன் திரிபு, பிரேசில் திரிபு என்று குறிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வைரஸ் திரிபு உண்டாக்கிய பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையைக் கையாள்வதில் இந்திய அரசு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி 2 கோடியே 60 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று இலட்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியத் திரிபு என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்   சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஆணை ஒன்றை அனுப்பியது.

இந்தியத் திரிபு என்று குறிப்பிடும் பதிவுகளை உங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

“இந்தியத் திரிபு உலக நாடுகளில் பாதிப்பை உண்டாக்குவதாக தவறான தகவல் இணையதளத்தில் பரவி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இது முற்றிலும் தவறான கூற்று,” என்று அதில் கூறப்பட்டுள்ளதாக ஏ.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.