கொரோனா வைரஸுக்கு எதிரான  ஆதரவு: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக அளவில் ஆதரவளித்த இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உலக நாடுகளை  உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது பாராட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு  தனது  நன்றி தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கொரோனா வைரஸுக்கு எதிராக உலகளாவிய ஆதரவு அளித்த இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸைத் தடுக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

 இந்நிலையில்,கொரோனா தடுப்பு மருந்து பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.