கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தனது பதவியிலிருந்து விலகுவதாக  அறிவிப்பு

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

அடுத்து நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ராவுல் காஸ்ட்ரோ தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகின்றது.

1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து  பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் பிடல்.

கடந்த 2006ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ராவுல் காஸ்ட்ரோ, 2008ம் ஆண்டு முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் 2011ம் ஆண்டு  கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில்  உரையாற்றிய ராவுல் காஸ்ட்ரோ, “ நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை  முடித்துவிட்டதாக மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என்றார்.