காஸ்மீர் பதற்றம் – நாட்டின் வரைபடத்தை மாற்றுகின்றது இந்தியா

இந்திய மத்திய அரசு, நேற்று முன்தினம் (02) இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 28 மாநிலங்கள், ஜம்மு கஷ்மீர், லடாக் உட்பட 9 யுனியன் பிரதேசங்கள் அடங்கிய புதிய அரசியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370ஆம் பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

அக்டோபர் 30ஆம் திகதி நள்ளிரவில் அதிகாரபூர்வமாக ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியுள்ளது. புதிதாகப் பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில், லே மாவட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மற்றப் பகுதிகள் அனைத்தும், மற்றொரு யூனியன் பிரதேசமான ஜம்மு கஷ்மீரில் இணைக்கப்பட்டுள்ளன. புதிய யூனியன் பிரதேசங்கள் செயற்பாட்டிற்கு வந்த பின்னர், இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28, யூனியன் பிரதேசங்கள் 9ஆகும்.