சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மீது பாதணிகளை வீசிய தமிழ் மக்கள்

சிங்கள மக்களின் நலனைக் கருதியே சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் முடிவை தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்டதாக தெரிவிக்கும் காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் தமிழரசுக் கட்சியின் நேற்றைய (03) கூட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீது பாதணிகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டதாக எமது வவுனியாச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் கூட்டம் இடம்பெற்ற வேளை அவர்களின் மண்டபத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதனிடையே, இலங்கை தமிழரசுக் கட்சியினர், தாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை தமது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அறிவித்துள்ளனர். இதன்படி தாம் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க உள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டார்.

வவுனியாவில்  இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் இந்த முடிவை தமது கட்சியினர் நடத்திய கலந்துரையாடலில் எடுக்கப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது.

இந்த முடிவை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாக இருக்கின்ற காரணத்தினால், இதனை அறிவிக்கும் பொறுப்பை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளோம் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார். சம்பந்தன் அவர்கள் ஏனைய இரு கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர் இந்தத் தீர்மானத்தை அறிவிப்பதற்கான ஒழுங்குகளை அவர் மேற்கொள்வார்.

sampanthan dss சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மீது பாதணிகளை வீசிய தமிழ் மக்கள்தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பாக தாம் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடிய போதும், குறிப்பாக கோத்தபயா மற்றும் சஜித் ஆகியோர் பற்றி கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து, இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கு பிரயோசனமான நடவடிக்கை எடுக்கும் முகமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு இணங்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சுமந்திரனோ, சம்பந்தனோ தெரிவிக்கும் கருத்தை பொது மக்கள் செவிமடுக்கும் அதே வேளை, அவர்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கே வாக்களிப்பார்கள் என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அதனாலேயே சுமந்திரன் மக்கள் தொடர்பாக தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.