காற்று மாசால் இந்தியாவில் கடந்த ஆண்டு 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலி

கடந்த ஆண்டில் இந்தியாவில் காற்று மாசுபடுதலால் 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டேட் ஒப் குளோபல் எயார் (State of Global Air) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் மட்டும் சுமார் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகியுள்ளனர்.

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளனர். உயர் இரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாட்டுக்கு அடுத்து, அதிகளவிலான பலி காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாக இந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆபிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.