காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்

இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.