4 முக்கிய சம்பவங்களின் பின்னணியில் கோட்டாபய – வன்னி எம்.பி. சார்ள்ஸ் குற்றச்சாட்டு

2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்சவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தவை வருமாறு –

“5 வருடங்கள் நிலையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி யார்? ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்த வரையில் இலங்கையில் ஆட்சியாளர்களுடைய ஆசிர்வாதத்துடன் ஆட்சியாளர்களின் ஆலோசனைகளுக்கமைவாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. 2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டார். 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி. கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்விரு சம்பவங்களிலும் பல்வேறு ஆதாரங்கள், தடயங்கள் கிடைக்கப் பெற்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

தண்டனை வழங்க முடியவில்லை என்றால் அது ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அந்தக்கொலைகள் நடைபெற்றன. குறிப்பாக அந்த காலப்பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி 2005, 2006 ஆண்டு காலப்பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸவினுடைய ஆலோசனையில் அந்த இரு எம்.பி.க்களும் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மிகபெரிய யுத்தம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல நாடுகளின் உதவியுடன் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அப்போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஸ இருந்தார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கத்தோலிக்க மக்களையும் அமெரிக்கா. பிரிட்டன் சுற்றுலா பயணிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் கூட பல்வேறு தடயங்கள் கிடைத்தபோதும் இன்று வரை யாரால் தாக்குதலுக்கு கட்டளை வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை.இந்த தாக்குதல் 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு நகர்வாகத்தான் இடம்பெற்றது. இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸ வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை கொண்டு வந்து அதன் மூலம் சாதிக்க முடியும் என்று நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்சவே இருந்துள்ளார் என்றார்.