காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை மீட்டுத்தர முடியாது – நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை மீட்டுத்தர முடியாது. அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறியுள்ளோம். இதுவே நாம் அவர்களுக்கு செய்ய முடிந்த ஒன்றாகும் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? எமது காணிகளை மீள வழங்குங்கள், எமது வாழ்க்கைக்கான தொழிலிற்காக கடற்படையின் தடைச் சட்டங்களை நீக்குங்கள் போன்றனவே இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் நாம் முடிந்தளவில் தீர்வினை வழங்கியுள்ளோம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை மீட்டுத்தர முடியாது. அவர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவதாகக் கூறினோம்.

சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும், தமிழர்களுக்கு சிங்கள மொழியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரிய வேண்டும்.

வடக்கு கிழக்கிலுள்ள சிறிய தீவுகளை விரிவுபடுத்த வேண்டும். அத்தீவுகளை அடிப்படையாகக் கொண்டே எமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.