கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வலியுறுத்திக் கல்முனையில் மேற் கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுழற்சி முறையிலான போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை கல்முனை விவகாரம் தொடர்ந்தும் கொதி நிலையில்தான் இருக்கும்.

மூன்று மாதங்களுக்குள் கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐ.தே.க. அமைச்சர்களும், கூட்டமைப்பு எம்.பிக்களும் இணைந்து வெள்ளிக்கிழமை வழங்கிய உறுதிக் கடிதத்தையும் போராட்டக்காரர்கள் கிழித்து வீசினர். “உடனடித் தீர்வு” என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.

ஆனால், கனிக்கிழமை கல்முனை சென்ற பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஒரு மாதத்துக்குள் பிரச்சினைளைத் தீர்ப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான போராட்டமே தொடர்கின்றது. பிரச்சினைக்கு தீர்வு வரும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன்று ஒரு முறுகல் நிலைமையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏட்டிக்குப் போட்டியாக உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது எனக் கோரி முஸ்லிம்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றார்கள். இவ்விடயத்தை உறுதியான முறையில் கையாளக் கூடிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கவில்லை. அதனால்தான் கூட்டமைப்புத் தலைமை மீது மக்கள் சீற்றமடைந்திருக்கின்றார்கள். சுமந்திரன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதும் அதனால்தான்.thumb large pratest கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

இந்தப் பிரச்சினை இப்போதுதான் உருவான ஒன்றல்ல. கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக இருந்துவரும் ஒரு பிரச்சினை. முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையை கூட்டமைப்பின் தலைமையால் தீர்திருக்க முடியும். நசீர் அஹமட்டின் கிழக்கு மாகாண ஆட்சியின் போது அதனை செய்திருக்கக் கூடிய நிலைமையில் கூட்டமைப்பு இருந்தது. ரணில் அரசுடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடனும் நல்லுறவை வைத்திருந்த கூட்டமைப்பு எந்தவித சிக்கலும் இல்லாமல் இதனைச் செய்திருக்க முடியும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 11 ஆசனங்களை பெற்ற கூட்டமைப்பு, 7 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் ஆட்சிப் பொறுப்பையும் முதலமைச்சர் பொறுப்பையும் ஒப்படைத்தது. நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இதனை செய்தார்கள். பதிலாக தண்டாயுதபாணிக்கு கல்வி அமைச்சும் துரைரட்ணசிங்கத்துக்கு விவசாய அமைச்சும் கிடைத்தது. முதலமைச்சர் பதவியையும், ஆட்சியையும் கொடுத்த போதாவது கல்முனை விவகாரத்தை இலகுவான ஒரு நிபந்தனையாகப் போட்டிருக்க முடியும்.

கல்முனை வடக்கு கோரிக்கை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்பதல்ல. இன்று இருக்கும் உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும் என்பதாகும். இது முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்பான ஒன்றல்ல. இனரீதியாக பிரதேச செயலகங்களை அமைக்க கூடாது என்றும், நிலத்தொடர்பற்ற செயலகங்களை அமைக்க கூடாது என்று கூறி தமிழர்களின் கோரிக்கையை முடக்க நினைப்பதும் நியாயமானதல்ல. இனரீதியாக, நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள் பல ஏற்கனவே உள்ளன. அதனால், இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்கள் வலுவற்றவை.

கடந்த (2018) பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்வைத்த வாக்குறுதிகளில் பிரதானமான  ஒன்று இதுதான். “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும். ஆனால் தமிழ் மக்கள் போராட்டத்தில் இறங்கும் வரை அந்த விவகாரத்தை கூட்டமைப்புத் தலைமை கையில் எடுக்கவில்லை.

அமைச்சரவை தரமுயர்த்துவதற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்தது. அதனை செயற்படுத்துவதற்கு முன்னர் அவசரமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ரணிலைச் சந்தித்தது. அதன்போது “தரமுயர்த்துவதில்லை” என்ற வாக்குறுதி ரணிலால் ஹக்கீமுக்குக் கொடுக்கப்பட்டது. இதனைத் தெரிந்திருந்த சம்பந்தன், ரணிலுக்கு சங்கடத்தைக் கொடுக்கக்கூடாது என்ற “பெருந்தன்மையுடன்” கல்முனைத் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை குப்பைக் கூடைக்குள் போட்டார்.

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை, தமது வெற்றியாகப் பாவித்து அரசியல் செய்த முஸ்லிம் தரப்பினரது விட்டுக்கொடுக்க முடியாத பிடிவாதமும், தமிழ்த் தரப்பின் – குறிப்பாக கூட்டமைப்பின் இயலாமையுமே இப்போது தேரர்கள் இந்தப் பிரச்சினையைக் கைகளில் எடுக்கக் காரணமாகியிருக்கின்றது. குறிப்பாக ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் உருவாகியுள்ள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் இதனைக் கையாள தேரர்கள் முற்படுகின்றார்கள்.

போர்க் காலத்தில் முஸ்லிம் மக்களைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதில் இனவாதிகள் வெற்றிபெற்றி ருந்தார்கள். இப்போது, தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்குவதன் மூலம் அந்தப் பிளவை மேலும் தீவிரமாக வைத்திருக்க அவர்கள் முற்படுகின்றார்கள். இந்தத் தேரர்கள் தமிழ் மக்களுடைய நலன்களில் எந்தளவுக்கு அக்கறையானவர்கள் என்பதை வரலாறு சொல்லும்.buddhist monks protest in colombo 11 கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் புரிந்துணர்வுடன் மிகவும் இலகுவாகத் தீர்த்திருக்கக்கூடிய இந்தப் பிரச்சினையை இப்போது தேரர்களின் கைகளில் கொடுத்துவிட்டார்கள். தேரர்களுக்கு தனியான நிகழ்ச்சி நிரல் ஒன்றுள்ளது. அதற்கேற்றவாறே அவர்கள் திட்டமிட்டுச் செயற்படுவார்கள். முஸ்லிம் தரப்பினரது விட்டுக்கொடுக்க முடியாது என்ற பிடிவாத மனப்போக்கும், தமிழர்களின் இயலாமையும்தான் இந்த நிலைமைக்குக் காரணம். அதேவேளையில் உடனடியாகத்  தீர்க்கப்படக் கூடிய இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கும் ரணிலின் வலைக்குள்ளும் இரு தரப்பினரும் விழுந்துவிட்டார்களா?