கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

கன்னியா ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஈழத் தீவு முழுவதும் காணப்படும் தொல்லியல் ஆதார மூலங்கள், ஈழத் தமிழர்கள்தான் இத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதை உலகத்திற்கு எடுத்துரைக்கின்றன. ஈழ மண் முழுவதிலும் துடிதுடித்துப் பறந்தபடி, மிக மிக அவசரப்பட்டு புத்தர் சிலைகளை நிறுவி, விகாரைகளை நிறுவி ஏன் பௌத்த சிங்கள மயமாக்கலில் இலங்கை அரசு ஈடுபடவேண்டும்? இத் தீவின் பூர்வீகக் குடிகள் ஈழத் தமிழர்கள் தான் என்ற வரலாற்று உண்மையை மறைக்கவே இவ்வாறு நடக்கிறதா?

வரலாறுகளை வைத்துக் கொண்டுதான் நிகழ்காலத்தை மதிப்பிடவும் வடிவமைக்கவும் வேண்டும் என்றால், ஈழம் தமிழர்களின் நாடு என்பதற்கு, ஈழத் தமிழ் மக்களிடம் ஏகப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஈழத் தீவு முழுவதும் யாருடைய ஆட்சி மேற்கொள்ளப் பட்டது? என்னென்ன மூலாதாரங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் சிங்களப் பேரினவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். இன மேலாதிக்கத்திற்கு எதிரான தனி நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது, தமிழ் இனத்தை அழிப்பதுதான் வழியென இலங்கை அரசு கருதியதைப் போன்றே வரலாற்றில் இருந்தும் ஈழமக்களை ஒடுக்க பௌத்த சிங்கள மயமாக்கலை ஒரு உபாயமாக இலங்கை அரசு கையாளுகின்றது.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பாரிய பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் இன விகிதாசாரத்தை சிதைக்கும் – ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவினால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசு என்று பெயரிட்டுக் கொண்ட இன்றைய அரசு, காணிப் பத்திரம் வழங்கி, பாரிய பௌத்த விகாரை அமைக்கின்றது.Navatkuly 13 13  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

வரலாறு முழுவதும் எந்த குடியேற்றங்களுக்கு எதிராக ஈழ மக்கள் போராடினார்களோ அந்தக் குடியேற்றமான மணலாறு குடியேற்றத்தில் பூர்வீகத் தமிழ் குளத்தற்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்து வைக்கிறார் இன்றைய சனாதிபதி மைத்திரிபால. திருகோணமலையின் குச்சவெளிப் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான இடங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு சிங்கள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது இன்றைய அரசு. இன்னும் சற்று தள்ளி வந்து, இறுதிப் போர் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலையிலும் சைவ ஆலயத்தின் வளாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பன்னெடுங்காலமாக சைவ ஆலயமான பிள்ளையார் கோயில் இருந்த இடத்தை பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கரமித்து பாரிய விகாரையை அமைத்துள்ளார். அந்த இடத்தில் பிள்ளையாரை வழிபட முடியாதளவுக்கு பிக்குவால் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன. ஆலயத்தில பறந்த சைவக் கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளார் பிக்கு. ஆயிரம் பானை வைத்து பொங்குவதற்கும் அப்பிக்குத் தடைகளை ஏற்படுத்தியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

வடக்கில் இத்தகைய பிரச்சினைகளின் மத்தியில்தான் கிழக்கில் கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கு இளைஞர்கள் திரண்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி கன்னியா மரபுரிமை அமைப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. கன்னியா வெந்நீரூற்று ஈழத் தமிழ் மக்களின் சமய வழிபாடுகளுடனும் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்தது. வடக்கில் கீரிமலையும் கிழக்கில் கன்னியாவும் இறந்தவர்களின் ஈமச்சடங்கு வழிபாட்டுடன், பண்பாட்டுடன் தொடர்புடையது. இவ் இரு இடங்களிலும் வடக்கு கிழக்கை சேர்ந்த ஈழத் தமிழ் மக்கள் சென்று தமது சடங்குகளையும் வழிபாடுகளையும் நிறைவேற்றுகின்றனர். 107939890 c527a2d0 135d 4d41 857e dcab75b31332 1  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

பண்டைய காலத்தில் ஈழத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னான இராவணன் ஒரு சைவ பக்தன். அவன் தன்னுடைய தாயின் மரணச் செய்தி கேட்டு, தனது வாளினை ஏழு இடங்களில் குத்தியதாகவும் அவற்றிலிருந்து சுடு நீர் கிணறுகள் தோன்றியதாகவும் பின்னர், தனது தாயின் அந்திமக் கிரியைகளை அவன் அங்குதான் மேற்கொண்டான் என்றும் இலக்கிய – இதிகாச, தொல்லியல் ஆதாரங்கள் பலவும் கூறுகின்றது. ஈழத்தின் கிழக்கில் திருக்கோணேச்சர ஆலயத்திற்கு தமிழ் சைவ சமய இலக்கிய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் கன்னியா வெந்நீரூற்றுக்கும் உண்டு.

சுதந்திர சிலோனில் மாத்திரமின்றி அதற்கு முந்தைய காலத்திலும், ஈழத்தை, குறிப்பாக கிழக்கையும் அதிலும் திருகோணமலை மற்றும் அம்பாறையை சிங்கள பௌத்த மயப்படுத்துகின்ற முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. தெற்கில் ஏராளமான இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுகின்றன. அத்துடன் போதியளவு நிலப் பகுதிகளும் வெறுமையாக காணப்படுகின்றன. அப்படியிருக்க ஏன், வடக்கு கிழக்கில் வந்து புத்தர் சிலைகளை வைக்க வேண்டும்? ஏன் விகாரைகளை கட்ட வேண்டும்? ஏன் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும்? மாத்தறையில் இருந்தும் அம்பாந்தோட்டையில் இருந்தும் ஏன் சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்ற வேண்டும்? நிச்சயமாக இன அழிப்புக்காகவே. அதுவே வரலாறு முழுதும் நடக்கின்றது.

இந்த நிலையில் கன்னியா வெந்நீரூற்றிலும் சிங்கள பௌத்தமயமாக்கல் திணிக்கப்படுகின்றது. சுற்றுலாப் பிரயாணிகளின் கவனத்தை ஈர்த்த இப் பகுதியில் சிங்களத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிங்கள பௌத்தத்தை திணிக்கும் வாசகங்களை நுழைக்கின்ற கைங்கரியங்களும் நடக்கின்றன.

நல்லாட்சி எனப்படும் நாடக ஆட்சியில் இங்கே பூர்வீக சைவ ஆலயம் ஒன்றின் அத்திவாரத்தை அழித்துவிட்டு, அங்கு பௌத்த தாது கோபுரத்தை அமைக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டமையே இங்கு பிரச்சினை. சனாதிபதி மைத்திரியின் பணிப்புக்கு இணங்கவே, அவரது செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் ஒப்புதல்களுடன் தொல்லியல் திணைக்களம் இந்த வேலையை செய்ய முடிவு செய்ததாக கூறுகின்றது. முன்னைய காலத்தில் மகிந்த ராஜபக்ச, தனது இராணுவத்தை கொண்டு செய்த சிங்கள பௌத்த மயமாக்கலை இப்போது மைத்திரிபால சிறிசேன தனது திணைக்களத்தை கொண்டு செய்வித்து வருகின்றார். தமிழ் நிலத்தில் விகாரை கட்டுவதைத்தான் இத் தொல்லியல் திணைக்களம் தமது முழு நேரப் பணியாக கொண்டுள்ளது. இதில் தமிழ் உத்தியோகத்தர்கள் இல்லை. முழுக்க முழுக்க சிங்கள மயம். அத்துடன், இருக்கும் ஒரு சிலரும் வாய் திறக்க முடியாத நிலை.img 0901  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

தமிழ் மக்களின் வாக்குகளில் சனாதிபதியாக தீர்மானிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, ஆயிரக்கணக்கான விகாரைகளை தமிழ் நிலத்திற்கு பரிசளித்து தமிழ் இனத்தை வரலாறு முழுதும் அழிக்கும் திட்டத்திற்கு ஒப்பமிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளையும் விஞ்சியது இது. இப்படியான சூழலில்தான், கன்னியா ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வடக்கு கிழக்கில் வந்து பிக்கு விகாரை கட்டலாம். ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமது உரிமைகளை பற்றி அமைதியாக பேசக்கூடாது. கோயில்களில் வழிபடக்கூடாது. அதற்குத் தடை விதிப்பதுதான் நல்லாட்சி. வடக்கு கிழக்கில் இருந்து திரண்ட இரண்டாயிரம் இளைஞர்களின் மத பண்பாட்டுணர்வை சிங்கள அரசு ஆயுத இராணுவ, காவல்துறை பலம் கொண்டு அடக்கியமை மிகப் பெரும் சனநாயக உரிமை மீறலாகும்.

கன்னியா போராட்டத்தில்கூட தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பலரைக் காணவில்லை. அத்துடன் சனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆதரவளிக்கும் நமது தலைமைகளால் இவைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதும், இதனை அரச மட்டத்தில் பேசி தீர்க்க முடியவில்லை என்பதும் எமது அரசியல் பயணத்தின் தோல்வியாகும். அத்துலிய இரத்தினதேரருக்காக அரசே ஆடியது. நாடே கலங்கியது. தமிழ் சித்தர் அகத்தியார் அடிகள்மீது சுடுதண்ணீர் ஊற்றப்பட்டது. தமிழ் மக்களுக்கு எத்தகைய நிலையோ, அதுவே தமிழ் கடவுளுக்கும் மதகுருமாருக்கும். சர்வதேச ரீதியாக இலங்கையை பாதுகாப்பதிலும் இன்றைய ஆட்சியை பாதுகாப்பதிலும் எமது தலைமை காட்டும் ஒற்றுமையான அக்கறையை கன்னியா விடயத்தில் காட்டவில்லை. கன்னியா பிள்ளையாரையும் நீராவியடிப் பிள்ளையாரையும் காப்பது ஒட்டுமொத்த நிலத்தையும் இனத்தையும் காப்பதாகும்.