எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன் 

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு சிறப்புப் பேட்டி

எங்களுடைய தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அதன் முதற்பகுதி வருமாறு,

கேள்வி:- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என் புதிய கட்சியை ஆரம்பித்து அதற்கான முதலாவது தேசிய மாநாட்டையும் நடாத்தியிருக் கின்றீர்கள். கட்சியின் நோக்கம் என்னவாக இருக்கின்றது?

பதில்:- தேசியம், சூழலியம், சுயநிர்ணயம்  ஆகிய மூன்று கோட்பாடு களினதும் அடிப் படையில் தமிழ் மக்களின் பிரிக்கமுடியாத தாயகமான வடக்குகிழக்கில் தமிழ் மக்களுக்கான  தன்னாட்சி அதிகாரத்தை  நிலைநிறுத்துதல்  என்பதே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இலக்கு ஆகும்.

கேள்வி:- அரசியலில் சூழலியம் என்ற சிந்தாந்தத்தை உள்ளடக்கி யிருப்பது பற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் குறிப்பிடமுடியுமா ?

பதில்:- இலங்கை அரசியலில் தமிழ்த்தேசியம் என்பது பெரும்பாலும் அதன் சரியான அர்த்தப் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளமால்  ஒரு வாயப்பாடு போல, வெற்றுக்கோசமாகவே உச்சரிக்கப்படுகிறது. உண்மையில் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லாடலின் உள்ளே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலுமே அடங்கிக்கிடக்கிறது. இதில் எமது மொழி, எமது பண்பாடு, எமது வாழ்விடம் என்று இம் மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்று ஊடுபரவியுள்ளது. இவற்றில் ஒன்றில்லாமல் மற்றையது இல்லை. ஆனால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு குறித்து நாம் பேசுகின்ற அளவுக்கு எமது சுற்றுச்சூழல் குறித்து நாம் பேசுவதில்லை.

ஒவ்வொரு தேசிய இனமும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் அந்த இனத்தின் தேசியச் சூழல் எனப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசியச் சூழல். அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களுக்கெனவும் ஒரு தேசியச் சூழல் இருக்கின்றது. ஆனால், இரண்டு தேசியச் சூழலும் பண்பியல் ரீதியாக வேறு வேறானவை.

சிங்களமக்களின் தேசியச் சூழலில் மழைக் காடுகள் இருக்கின்றன. எங்களுடைய தேசியச் சூழலில் உலர்காடுகள் இருக்கின்றன. அவர்களின் தேசியச் சூழலில் கித்துள் இருக்கின்றது. எங்களிடம் பனை இருக்கின்றது. அங்கு இரத்தினக்கற்கள் விளைகின்றன. இங்கு இல்மனைற் மணல் கொட்டிக் கிடக்கிறது.

அங்கு றம்புட்டான் பழம்,  இங்கு கூழாம்பழம்.  இப்படி இரண்டு இனங்களினதும்  தேசியச் சூழல் வெவ்வேறானவை  என்பதால்  எங்களுடைய சூழல் பற்றிய போதிய அறிவு அவர்களுக்கோ,  அவர்களுடைய சூழல்பற்றிய போதுமான  புரிதல் எங்களுக்கோ இல்லை. இதனால்தான் எங்களுடைய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, சூழலியம் என்ற சித்தாந்தத்தையும் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பேசு பொருளாக  முக்கியப் படுத்தியிருக்கின்றோம்.

கேள்வி:- புலிகள் இயற்கை வளங்களைப் பாதுகாத்தார்கள் என்று தென்னிலங்கைத் தரப்புகளே புகழுகின்ற நிலையில் 2009இற்கு பின்னரான நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:- விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே மண்மீட்புப் போராட்டம் அல்லவே. வருங்காலத் தலைமுறைகள் வாழ்வாங்கு வாழவேண்டுமெனில் இயற்கை வளங்களை வளங்குன்றாது அவர்களிடம் நாம் கையளிக்கவேண்டும். விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புப் பிரிவு, வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்று தனியான அலகுகளை நிறுவி யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் இந்த விடயத்தில் கவனமாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், 2009இல் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எமது மண்வேலிகள் இல்லாத தோட்டம்போல ஆகிவிட்டது.tamil eelam defacto state 6 எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) - ஐங்கரநேசன் 

தடுப்பார் இல்லாததால் மணல், கிறவல், காட்டு மரங்கள் என்று எல்லா வளங்களுமே  கண்மூடித்தனமாகச் சுரண்டப்படுகின்றன. அரசாங்கமும், எமது சூழல் குறித்து கொஞ்ச மேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு, காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு சுண்ணாம்புக்கல்லை காங்கேசன் துறையில்  இருந்து மீளவும் அகழவேண்டும்  என்பதில் அரசாங்கம் விடாப்பிடியாக நிற்கிறது. ஏற்கனவே சுண்ணாம்புக்கல் அகழப்பட்டதால் அங்கு அதலபாதளத்துக்குப்  பாரிய குழிகள் காணப்படுகின்றன.

கடலை அண்டிய பகுதியில்  இவ்வாறு தொடர்ந்து  சுண்ணாம்புக் கல்  அகழ்ந்தால் கடல் நீர் உட்புகுவதற்கான கதவுகளை நாங்களே திறந்து விட்டவர்கள் ஆவோம். இதனாலேயே, காங்கேசன்துறை  சீமெந்து தொழிற்சாலையில்  கிளிங்கர்களை கொண்டுவந்து அரைத்து சீமெந்தை உற்பத்தி செய்யலாம் அல்லது வெளியில் இருந்து சீமெந்தை கப்பல்களில்  இறக்குமதி செய்து இங்கு பொதியிடும் வேலையைச் செய்யலாம் என்று நாங்கள் கூறி வருகிறோம்;. ஆனால் இவற்றைச்செவிமெடுக்காமல் நாங்கள் அபிவிருத்திக்கு எதிராக உள்ளோம் என்று அரசாங்கம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றது.

வருங்காலத் தலைமுறைகளைப் பற்றிக் கருத்திலெடுக்காமல் இலாப வேட்கை கொண்டு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே எங்களுடைய தேசியச் சு10ழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்கவேண்டும் என்று நான் சொல்லி வருகின்றேன்.

கேள்வி:- விடுதலைப்புலிகள் காடு வளர்த்தார்கள் என்று புகழ்ந்து பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விடுதலைப் புலிகள் போதைப்பொருள் வியாபாரம் செய்தார்கள் என்று அண்மையில் கூறி இருப்பது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்:- இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்தே அவர்களுடன் ஒப்பிட்டு விடுதலைப்புலிகளும்  போதைப்பொருள் வியாபாரம் செய்து பெற்ற பணத்தி லிருந்தே  ஆயுதத்தை வாங்கினார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பதும் விடுதலைப் புலிகளின் போராட்டம் என்பதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாதவை. விடுதலைப்புலிகள்  தமிழ் இனத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். தமிழ் மக்களின் பேராதரவு அவர்களின் பின்னால் இருந்தது. அவர்கள் பொன்னாகவும் பொருளாகவும் விடுதலைப்புலிகளுக்கு வாரி வழங்கினார்கள். பெண்கள் மூக்குத்தி தொடங்கி தாலி வரை மனமுவந்து கழற்றி வழங்கியிருக்கிறார்கள்.

யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற எங்கள் உறவுகள் தங்கள் வியர்வையை டொலர்களாகவும், பவுண்களாகவும் மாற்றிப்புலிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்;. இதனால்,முஸ்லீம் மக்கள் ஆதரவைப் பெறாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுப் பணம் ஈட்டியதைப் போன்ற தேவை வெகுசன ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளுக்கு இருந்திருக்கவில்லை. ஜனாதிபதி அவர்களு டைய கூற்று விடுதலைப் புலிகளை மாத்திரம் அல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத் தையும் கொச்சைப்படுத்தியுள்ளது.

 

(தொடரும்)