ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

நன்கொடையை பெற நூற்றுக்கணக்கான நபர்கள் பள்ளியில் குவிந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அரசை ஆட்சியில் இருந்து அகற்றியதில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இந்நகரை நடத்தி வருகின்றனர்.

உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, நன்கொடை விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஹௌதி போராளிகள் வானை நோக்கி சுட்டதாகவும், அப்போது, மின்கம்பியை தோட்டா தாக்கியதில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் இதனால் மக்கள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.