மலையக மக்களின் அடையாள உறுதிப்பாடு-துரைசாமி நடராஜா    

மனசாட்சி: 3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை  தொடர் )இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றி வருபவர்கள்.சகல துறைகளிலும் தனித்துவம் மிக்க அவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து யாரும் புறந்தள்ளி விடமுடியாது.

இந்நிலையில் அம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்களின் அடையாளங்கள பாதுகாக்கப்பட்டு பின்வரும் சந்ததிகள் அறிந்து கொள்ள வழி செய்யப்படுதல் வேண்டும்.எனினும் இதன் சாதக விளைவுகள் எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளன என்பது தொடர்பாக சிந்திக்கின்றபோது விடை திருப்தி தருவதாக இல்லை.

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை மூடி மறைத்து, இம்மக்களின் சனத்தொகையை குறைத்துக் காட்டி, அவர்களின் உரிமைகளை மழுங்கடிக்கும் நோக்கத்திலான செயற்பாடுகளே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன.இந்நிலையானது இம்மக்களின் அதிருப்தியினை அதிகரிக்கச் செய்துள்ளதோடு எதிர்காலம் குறித்த ஸ்திரமற்ற வெளிப்பாட்டினையும் தோற்றுவிப்பதாகவுள்ளது.

உலகில் பல சமூகங்கள் காணப்படுகின்றன.ஒவ்வொரு சமூகமும் தமது நிலைபேறான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன.பொருளாதாரம், கல்வி, அரசியல் போன்ற பல துறைகளிலும் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்துவதன் ஊடாக மேலெழும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதேவேளை சில சமூகங்களின் கரிசனையற்ற, தூரநோக்கற்ற செயற்பாடுகள் அச்சமூகத்தின் அழிவிற்கும் வழிகோலியுள்ளன என்பதனை மறுத்துவிட முடியாது.இந்த வகையில் உலகளாவிய ரீதியில் சில சமூகங்கள் இன்று  தடமிழந்திருப்பதும் புதிய விடயமல்ல.

ஒரு சமூகம் உயிர் வாழ்வதற்கு அச்சமூகத்தின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.இந்த அடையாள உறுதிப்பாடு இன்னோரன்ன வழிகளிலும் அச்சமூகத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாக அமையும். மனித உடற்கூற்றுத் தத்துவங்களின்படி ஒரு இனத்தை இன்னொரு இனத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.அதற்கான மானிடவியல் சான்றுகளும் கிடையாது.

எனினும் ஒரு இனத்தினை ஏனைய மக்கள் குழுக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய  சில தனித்துவ அடையாளம் காட்டும் நிலைமைகள் காணப்படுவதாக புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.இந்த வகையில் இலங்கையில் வாழும்  மலையகத் தமிழ் மக்களை அவர்களுடைய சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் வாழ்க்கை நிலைமைகளில் இருந்து, இலங்கையில் வாழும் ஏனைய மக்கள் குழுக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய சில தனிப்பண்புகளையும் இவர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவையாவன :- மொழி, சமய, கலாசார பண்புகள், நாட்டாரியல், கல்வித் தகைமைகள், தொழில் முறைகள், வருமான மட்டங்கள், குடியுரிமை நிலைமைகள், வாழும் பிரதேசங்கள், வாழ்விட நிலைமைகள், நுகர்ச்சி முறைகள் என்பன அவைகளாகும்.இவ்வாறாக நோக்குகையில்  இந்திய வம்சாவளி சமூகம் குறித்து நாம் சிந்திக்கின்றபோது இச்சமூகத்தின்  தனித்துவம் மற்றும் அடையாளம் போன்றவற்றை சீர்குலைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாக முறையாக திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது பலரினதும் குற்றச்சாட்டாகும்.சனத்தொகை அதிகரிப்பில் மழுங்கடிப்பு, குடும்பக் கட்டுப்பாடு நிலைமைகள் விஸ்தரிப்பு, காணிச் சுவீகரிப்பு , தொழிலாளர் வெளியேற்றம் எனப்பலவும் இதில் உள்ளடங்கும். இவ்விடயத்தில் இனவாதிகளின் முன்னெடுப்புக்கள் ஒரு புறமிருக்க எம்மவர்களும் எமது பின்னடைவிற்கு காரண கர்த்தாக்களாக இருந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சில ஒப்பந்தங்கள் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி நிலை ஏற்படுவதற்கு காரணமாகியுள்ளன.இதனால் பலர் இந்தியா செல்ல நேர்ந்தது.1911 ம் ஆண்டில் இலங்கையின் மொத்த தொகையில் இந்திய வம்சாவளி மக்களின் வீதம் 12.9 ஆகவிருந்தது.1921 இல் 13.4, 1931இல் 15.4, 1946 இல் 11.7, 1953 இல் 12.0 1963 இல் 10.6, 1971 இல் 9.3, 1981 இல் 5.5, 2012 இல் 4.1 என இலங்கையின் மொத்த சனத்தொகையில் இந்திய வம்சாவளி மக்களின் வீதமானது அமைந்திருந்தது.

1971 இற்கும் 1984 ற்கும் இடையில் 446,338 இந்திய வம்சாவளி மக்கள் தாயகம் திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்த வகையில் 1971 இல் 25,384 பேரும், 1974 இல் 44,978 பேரும், 1977 இல் 39,818 பேரும், 1980 இல் 18,867 பேரும், 1982 இல் 28,120 பேரும், 1984 இல் 31,338 பேரும் தாயகம் திரும்பியிருந்தனர்.இந்திய வம்சாவளி மக்களின் தொகை படிப்படியாக வீழ்ச்சி பெற்றமைக்கு பல காரணங்கள் பொறுப்பாகியுள்ளன.இம்மக்களில் சிலர்   தாமாகவே தாயகம் திரும்பியமை, ஒப்பந்தங்கள், பிழையானபதிவுகள் எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.1931 இற்கும் 1948 இற்கும இடையேயான காலப்பகுதியில் கணிசமான தொகையினர் தாமாகவே தாயகம் திரும்பியிருந்தனர்.

சனத்தொகை மூடி மறைப்புகள்

இந்திய வம்சாவளி மக்களில் பலர் சனத்தொகை கணிப்பீடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில்  தமது இனத்தை இலங்கைத் தமிழர் என்று பிழையாக பதிவிட்டுள்ளதன் காரணத்தால் இச்சமூகத்தினரின் தொகையில் வீழ்ச்சி ஏற்படவும், இலங்கைத் தமிழரின் தொகையில் அதிகரிப்பு ஏற்படவும் ஏதுவானது. இது தொடர்பில் இவர்களுக்கு விளக்கமளித்தபோதும் பலர் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதையும் கூறியாதல் வேண்டும்.

நீண்ட காலமாக பிரசாவுரிமை இல்லாதிருந்த இந்தியத் தமிழர்கள் 1988 இல் பிரசாவுரிமையைப் பெற்றுக் கொண்ட நிலையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர் என்று பதியலாயினர்.இந்திய கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், இலங்கைப் பிரசாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்க வேண்டும் என்று சிந்தித்த இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர்.

1983  இனக் கலவரத்திற்குப் பின்னர் இலங்கையில் பிறந்த இந்தியத் தமிழர்களின் பிள்ளைகளுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது.அத்தகையோர் தாங்கள் இலங்கையில் பிறந்ததால் இலங்கைத் தமிழர் என்றவாறு பதிவுகளை மேற்கொண்டனர்.

இத்தகைய விடயங்கள் இந்தியத் தமிழர் பற்றிய சரியான மதிப்பீட்டுக்கு இடையூறாக அமைந்தன. இதேவேளை இந்திய வம்சாவளித் தமிழர் சனத்தொகை மதிப்பீட்டில் திட்டமிட்ட மூடிமறைப்பிற்கு உள்ளாகி வருவதாக புத்திஜீவிகள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாக உள்ளது.

இவர்களின் கூற்றுக்கள் நம்பகத்தன்மை மிக்கதாக காணப்படுகின்றன. இலங்கையில் தேர்தல் தொகுதிகளைத் தீர்மானிக்கின்றபோது மக்கள் தொகை பிரதான கூறாக கருத்தில்  கொள்ளப்படுகின்றது.இந்நிலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை குறித்த புள்ளிவிவரங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.இதில் திட்டமிட்ட மூடிமறைப்புக்கள் இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகம் மேலெழும்புகின்றது.

புள்ளிவிவரத் திணைக்கள தகவலின்படி இங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை 8,39,504 ஆகும்.இது மொத்த சனத்தொகையில் 4.1 வீதமாகும்.கடந்த கால மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் பெருக்கத் தொகையைக் கணிப்பிடுவோமாயின் 2012 இல் இங்கிருந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் எண்ணிக்கை 14,44,184 ஆகும்.இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 7.1 வீதமாக இருந்தது.இந்நிலையில் அரசியலின் சகல மட்டங்களிலும் இம்மக்களின் பிரதிநிதித்துவம் 7.1 வீதம் என்பதனை வலியுறுத்த வேண்டும்.மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் ஆறு இலட்சத்து 4,680 இந்திய வம்சாவளியினர் தம்மை இலங்கைத் தமிழர்களாக பதிவு செய்து கொண்டுள்ளமை தெரியவருகின்றது.2012 ஆம் ஆண்டு தகவலின்படி 22 இலட்சத்து 69,266 பேர் இலங்கைத் தமிழர்களாவர்.

இவர்களுள் மேற்கூறிய  ஆறு இலட்சத்து 4, 680 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் தொகை 16 இலட்சத்து 64,586 ஆகவே காணப்பட வேண்டும்.அல்லது மொத்த சனத்தொகையில் 11.2 வீதம் என்பதற்கு பதிலாக 8.14 வீதமாக இது அமைதல் வேண்டும்.அத்தோடு இதனை மனதிருத்தி இந்திய வம்சாவளியினருக்குரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் புத்திஜீவிகள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றனர். .

பெருந்தோட்டத் தொழிற்றுறையின் நெருக்கீடுகள் தொழிலாளர்களின் இடப்பெயர்வினை ஊக்கப்படுத்தியுள்ளன.இதனை பல சந்தர்ப்பங்களில் எம்மால் அவதானிக்க முடிகின்றது.1981 இன் குடிசார் மதிப்பீட்டு அறிக்கையின்படி சுமார் 75,000 பேர் வடமாகாணம் சென்று குடியேறி இருந்தனர்.இதனைக்காட்டிலும் 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் மலையக மாவட்டங்களில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன.இந்நிலையானது தொழிலாளர் இடம்பெயர்விற்கு வித்திட்டிருந்தது.

அத்தோடு 1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் வேலையின்மை, உணவின்மை போன்ற நிலைமைகளும் தொழிலாளர்களின் வடமாகாண நகர்விற்கு வலுசேர்த்திருந்தன.இத்தகையோர் வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் அதிகமாக குடியேறிய நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் மக்களுடன் கலந்து தமது அடையாளங்களை இழந்து வாழ்வதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன்  போன்றோரும் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.இந்நிலை மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லதாகும்.
மலையகத் தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள மொழியில் பேசுவதிலும், பௌத்த மதக் கிரியைகளைப் பின்பற்றுவதிலும்,சிங்களவர்களைப் போன்று பாவனை செய்து காரியமாற்றுவதிலும், அவர்களின் உணவு வகைகளை விரும்பியுண்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது அறியாமையின் வெளிப்பாடாகும்.இதனால்  இந்திய வம்சாவளியினரின் அடையாளங்கள் கேள்விக்குறியாகின்றன.இதனால் நாமே நமக்கு எதிரியாக மாறிவிடுவதோடு, நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்கின்றோம் என்றாலும் மிகையாகாது. பிற இனங்களையும், அவர்களின் கலை கலாசார விழுமியங்களையும் இந்திய வம்சாவளியினர் மதித்து நடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பன்மைக் கலாசாரம் என்பது நாட்டிற்கு அழகாகும். ஒரு கொத்தில் பலவர்ண மலர்களும் இணைந்திருப்பதென்பது  தனி அழகல்லவா? ஆனால் நாம் எமது கலை கலாசார விழுமியங்களை அடகு வைத்துவிட்டு வேற்று இன கலை கலாசாரங்களை வரித்துக் கொள்வது எந்தளவுக்கு நியாயமாகும்?

வேற்றுமையில்  ஒற்றுமை காண விளைதலே சிறப்பைத் தரும் என்பதனை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.ஒரு சமூகத்தின் அடையாளம் இழக்கப்படுவதென்பது அச்சமூகம் எதிர்கொள்ளவுள்ள ஆபத்தின் அடையாளமாகும்.இந்நிலையானது நீண்ட காலத் தழும்புகளுக்கு அத்திபாரமாக அமையும்.இதனை உணர்ந்து ஒவ்வொரு சமூகமும் தனது அடையாள உறுதிப்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்