எனக்கு ஏதும் பாதகம் ஏற்படின் அரசே பொறுப்பேற்கவேண்டும் – சபையில் சுமந்திரன் தெரிவிப்பு

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விஷேட அதிரடிப்படை (எஸ்.ரி.எப்.) பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்ற பின்பே தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பான விவாதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“அநேக காலமாக ஆயிரம் அடிப்படைச் சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுடன் நோக்குகையில் தற்போது இது இரண்டாயிரம் ரூபாவாக இருத்தல் வேண்டும். இருப்பினும் அந்த ஆயிரம் ரூபா உயர்வு கூட இன்னும் வழங்கப்படாது இருக்கின்றது.

கடந்த சில நாள்களாக பொதுவில் முதல் பொலிகண்டி வரையான நடை பயணத்தில் நாம் 10 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அவற்றுள் இந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் ஒன்றாகும். இந்தப் பேரணி சிவில் சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது.

இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதுடன் ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பை நாம் தெரிவித்திருந்தோம். இப்பேரணி சமாதானமான முறையில் நடைபெற்றதுடன் அநேகர் திரண்டு வந்து தமது ஆதரவைத் தெரிவித்து இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு – கிழக்கு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன். இந்தப்பேரணி நிறைவுற்ற மறுகணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது. எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் எங்கும் முறையிடாத போதும் அரசாங்கமே எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்தது.

எனவே எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்குத் தெரிவிக்காது அல்லது நான் முறையிடாத போது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் இப்போது பாதுகாப்பை மீளப்பெறுவதேன்? ஒருவேளை இவ்விடயங்கள் உண்மையாக இருந்த போதும் நான் பேரணியில் பங்குபற்றியதன் விளைவாக அரசாங்கம் என் மீது எரிச்சல் அடைந்திருக்கலாம்.

அல்லது கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்கள் பொய்யாகவும், அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதற்காகவும் இருக்கலாம். அல்லது மிகவும் வஞ்சனை காரணமாக எனது பாதுகாப்பை அகற்றுவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாகவும் இருக்கலாம்.எனவே எனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்” என்றார்.