இனப்படுகொலை இப்போதும் நடக்கிறது – சர்ச்சையை ஏற்படுத்திய கஜேந்திரகுமாரின் உரை

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப்படு கொலையை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘இன்றும் இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டபோதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா-இனப்படுகொலை இடம் பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. கூறுகின்றார். அவர் எதனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் எனத் தெளிவில்லை என கேள்வி எழுப்பினார்?

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி :- இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை கொள்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை என்றே கருதப்படும். 2009 ஆம் ஆண்டு வரையில் உயிர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதை போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

இதன்போது ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் :- இனப்படுகொலை என்பது எமக்குத் தெரிந்த வரை திட்டமிட்ட கொலையாகும். அதிகளவான மக்களை அல்லது ஒரு இனக்குழுவை கொள்வது இனப்படு கொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்றாகும். எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள்” என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொகாலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள்.

ஹர்ஷ டி சில்வா:- இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தை கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன், அதேபோல் இன்றும் எமது அடையாளங் கள் அழிக்கப்பட்டு வருகின்றது. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால்:- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்குப் பொருத்தமான வார்த்தை இதுவல்ல.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தைப் பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனை செய்யுங்கள்.