இலங்கைச் சட்டங்களில் தலையிட ஆணையாளருக்கு உரிமையில்லை – அமைச்சர் பீரிஸ் காட்டம்

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கையில் அதன் பலவீனத்தை கண்டோம். நாட்டின் அரசியலமைப்பு திருத்தம், இராணுவ அதிகாரிகளை உயர்ந்த பதவிகளுக்கு நியமிக்கின்றமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு தலையீடு செய்ய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ அல்லது அதன் ஆணையாளருக்கோ உரிமையில்லை.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நெலும்மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருதுத்து வௌியிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

“ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை சார்ந்த விடயங்கள் வருகின்றன. அப்போது வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பார். நாங்கள் எமது அரசின் கருத்தை ஒரு கொள்கை வரையறைக்கு உட்பட்டே வழங்குகின்றோம். சில அடிப்படை விடயங்களுக்கு அமைய இலங்கை அரசின் பதிலை ஜெனீவாவுக்கு அளிக்கின்றோம்.

அதற்கமைய, ஐ.நாவில் உள்ள அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழு என்பது அதனது கடமைகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது. வரையறையை மீறி அந்த அமைப்பு செயற்பட்டால் சட்டவிரோதமானதாகும். நாட்டின் உள்நாட்டு செயற்பாடுகளுக்கு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு எந்த உரிமையும் இல்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கையில் அதன் பலவீனத்தை கண்டோம். நாட்டின் அரசியலமைப்பு திருத்தம், இராணுவ அதிகாரிகளை உயர்ந்த பதவிகளுக்கு நியமிக்கின்றமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு தலையீடு செய்ய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ அல்லது அதன் ஆணையாளருக்கோ உரிமையில்லை.

இலங்கைக்கு மட்டும் வரையறைக்கு உட்பட்ட விடயமல்ல. இது மிகவும் பாரதூரமான முன்னுதாரணமாகும். உள்நாட்டு செயற்பாடுகளுக்கு தலையீடுகின்ற சம்பிரதாயமானது ஐ.நாவில் உறுதியானால் அது ஏனைய நாடுகளுக்கும் ஏற்படும். நாட்டின் அரசியல் மற்றும் சமூக நிலையை ஆராய்கின்ற போது நீதியானதாக நடத்தப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் குறித்து நெருக்கம் அல்லது வெறுப்பு என்பன அதில் சம்பந்தப்படக்கூடாது.

30 வருட போருக்குப் பின் வடக்கில் அபிவிருத்தி, சமாதானம் என்பவற்றை நான் கடந்த சில நாட்களாக கண்டேன். மூன்று நாட்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் நான் இருந்தேன். பெருந்தெருக்கல், பாடசாலை, ஜீவநோபாய வழிகள் குறித்து பாரிய விருத்திகள் அங்கு உள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகமயப்படுத்தல், தனிப்பட்ட காணிகளில் இருந்து 80 வீதத்திற்கும் அதிகமான படையினர் விலகி அவை உரிமையாளர்களுக்கு வழங்கல், காணாமலாக்கப்பட்டடோர் ஆணைக்குழு செயற்பாடு, தொழிற்சாலை, விவசாயம் விருத்தி குறித்து சாதாரண மதிப்பீடு காணப்பட வேண்டும்.

அதேபோல நாடுகள் குறித்து விசாரணை செய்கையில் ஒரே அளவுகோள் எடுத்துக்கொள்ளபடல் வேண்டும். போரில் இடம்பெற்றவை குறித்து ஆராயும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. ஆணைக்குழு கையாண்ட பல்வேறு சந்தர்ப்பங்களும் வித்தியாசப்படுகின்றன. சில நாடுகள் குறித்து கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகையில் ஏனைய நாடுகளுக்கு பாதுகாப்பளித்தல் என்பது ஐ.நாவின் அடிப்படை சிந்தனைகளுக்கு முரணாகும். இதில் இலங்கைக்கு அநீதியேற்பட்டதாகவே கருதுகிறோம்.

ஐ.நா. அமைப்பின் அடிப்படை விடயங்களில் நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்துவம், உள்நாட்டு பொறிமுறைக்கு கௌரவம் அளிக்கப்படுவது அவசியம். இலங்கையில் உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு என அமைக்கப்பட்டு பெறுமதிமிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உச்சநீதிமன்ற நீதியரசரான நவாஸ் தலலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகளை ஆராய்ந்து, எஞ்சிய பணிகள் குறித்த பரிந்துரைகளை 6 மாதங்களிற்குள் அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து பயனுள்ளதாக பார்க்க வேண்டும். மாறாக பிழையாக பார்த்து தீர்மானங்களை எடுப்பது பிழையான கொள்கையாக அமையும்.

எந்த விசாரணை ஏற்படினும் நாட்டின் அரசியலமைப்பிற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். மக்கள் ஆணையை பிரதிபலிக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். இவை குறித்து கவனம் செலுத்தாமல் நாட்டிற்கு நீதியை ஏற்படுத்த முடியாது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த வரையறைக்கு மத்தியில்தான் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்துடன் சேர்த்தோம். அது இலங்கை அரசாங்கம் செய்த மிகப்பெரிய பணியாகும். விடுதலைப் புலிகளுடன் இருந்த போராளிகளையே மீண்டும் சமூகமயப்படுத்தினோம். அதேபோல கண்ணிவெடிகளை அகற்றி, மக்களுக்கு தங்களது வீடுகளுக்கு செல்வதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தினோம். யுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இதுவரை எந்த வகையிலான மாற்றங்கள் ஏற்பட்டன என்பது குறித்து தெளிவுபெற்றுக்கொள்வது அவசியமாகும்” எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.