எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வட அமெரிக்காவில் வசிக்கும் சிறிய குருவி நீளமான வால், தலையில் சிறிய கொண்டை அதன் பெயர் ரிற்மவுஸ், அந்த பெயரில் ஒரு படை நடவடிக்கை மூலம் ரஸ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு திட்டமிட்டது உக்ரைனின் GUR எனப்படும் புலனாய்வு அமைப்பு.

russia எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்ரஸ்யாவின் வான்படை விமானிகளை முகம்தெரியாத நபர்கள் போல தொடர்புகொண்ட உக்ரைனின் புலனாய்வுப் பிரிவினர் ரஸ்யாவின் விமானங்களை அல்லது நவீன விமானங்களின் தொழில்நுட்ப இரகசியங்களை உக்ரைனுக்கு கொண்டுவந்தால் பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் எனவும், பாதுகாப்பாக அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் தங்கவைக்கப்படுவார்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன.

பல அதிகாரிகள் அதற்கு மயங்காதபோதும், மக்சிம் குஸ்மினோவ் உக்ரைனின் வலைக்குள் வீழ்ந்திருந்தார். ரஸ்யாவின் 15 மில்லியன் டொலர்கள் பெறுமதியான எம்ஐ-8 என்ற இருப்புக்கவச உலங்குவானுர்தியை செலுத்தும் அவர், அந்த உலங்குவார்தியை உக்ரைனுக்கு கடத்திச் செல்வதன் மூலம் 500,000 டொலர்களை சன்மானமாகப் பெறவும், ஐரோப்பிய நாட்டில் உல்லாசமாக வாழவும் விரும்பினார் அந்த 28 வயதான விமானி.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அவருடனான தொடர்புகளை உக்ரைன் புலனாய்வுத்துறை ஏற்படுத்தியது. ஆறுமாதமாக இரகசியமாக திட்டமிடப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பணி, தரமுயர்த்தப்பட்ட எஸ்யூ-27 மற்றும் எஸ்யூ-30 தாக்குதல் விமானங்களின் உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களுடன் எம்ஜ-8 உலங்குவானுர்தியை உக்ரைனுக்குள் கடத்திவருவதாகும்.

ukraine எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அதற்கான நாள் கடந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் நாள் என குறிக்கப்பட்டது. உலங்குவானுர்தி எல்லையை தாண்டும்போது அது உக்ரைனின் வானெதிர்ப்பு படையினரின் அல்லது ரஸ்யாவின் வானெதிர்ப்பு படையினரின் தாக்குதல்களில் சிக்காதவாறு கார்கிவ் பகுதியின் ஊடாக பாதுகாப்பாக பறப்பதற்கான பாதையும் தெரிவுசெய்யப்பட்டது.

மேலும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்காக அது மிகவும் தாள்வாக பறக்கவேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது. நடவடிக்கைக்கு முன்னர் மக்சிமின் குடும்பம் இரகசியமாக ரஸ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு நகர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஆம் நாள் மாலை 4.30 மணியளவில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஸ்யாவின் குர்க்ஸ் வான்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட உலங்கவானுர்தியில் மக்சிமும், இரண்டு துணைவிமானிகளும் இருந்தனர். விமானத்தின் ரேடியோ கருவிகள் அணைக்கப்பட்டு, இரண்டு ரஸ்ய வான்படைத்தளங்களுக்கு நடுவாக மிகவும் தாள்வாக பறக்க ஆரம்பித்தது உலங்குவானுர்தி.

எல்லையை தாண்டும்போது, துணைவிமானிகள் இருவருக்கும் ஏதோ விபரீதம் இடம்பெறப்போகின்றது என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அவர்கள் பதற்றமடைந்த அதேசமயம், எல்லையில் இருந்த ரஸ்ய படையினர் தமது துப்பாக்கிகளால் உலங்குவானுர்தியை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்திருந்தனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மக்சிம் காலில் காயமடைந்திருந்தார் எனினும் உலங்குவார்தியை உக்ரைனின் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்ட இடத்தை நோக்கி செலுத்தினார்.

அதேசயம், அவரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலங்குவானுர்தியை கைப்பற்றி மீண்டும் ரஸ்யாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு துணைவிமானிகளையும் தனது கைத்துப்பாக்கியால் விமானத்திற்குள் வைத்தே மக்சிம் சுட்டுப் படுகொலை செய்திருந்தார்.

விமானம் தரையிறங்கும்போது இரு துணைவிமானிகளும் சடலமாக உலங்குவானுர்திகள்குள் கிடந்தனர். அவர்களின் சடலங்கள் பின்னர் ரஸ்யாவிடம் கையளிக்கப்பட்டபோது இருவரினதும் தலையில் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் உக்ரைனில் ஊடகவியலாளர்களை சந்தித்த மக்சிம் தனது வீர தீர செயல்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், உக்ரைன் வான்படையில் இணைந்து பணியாற்றப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அவருக்கு 500,000 டொலர்கள் பணம் வழங்கப்பட்டது.

எனினும் பின்னர் அவர் தனது முடிவை மாற்றி ஸ்பெயினுக்கு சென்றிருந்தார். அதாவது உக்ரைனில் தனக்கு பாதுகாப்பு இல்லை என அவர் உணர்ந்ததால் ஸ்பெயினுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நான் எல்லோரையும் மன்னிப்பேன் ஆனால் துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் அண்மையில் ஒரு ஊடகத்திற்கு தெரிவித்த கருத்தின் பின்னர், மக்சிமை தாங்கள் கண்டறிந்து தண்டனை வழங்கப்போவதாக ரஸ்ய படையினர் ரஸ்யாவின் அரச ஊடகம் ஒன்றிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை(19) ஸ்பெயினின் மத்தியதரை கடற்கரைக நகரமான விலயோயோசா என்ற நகரத்திற்கு அண்மையான குடியிருப்பு பகுதியில் மக்சிமின் உடல் 12 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், அவரின் உடலுக்கு மேலால் கார் ஏறிச்சென்ற அடையாளத்துடன் வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள கார் தரிப்பு இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

முதலில் இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாகவே ஸ்பெயின் காவல்துறையினர் எண்ணினர் ஆனால் பின்னர் தான் அவர்களுக்கு உக்ரைன் விவகாரம் தெரியவந்தது. அவரின் உடலை அவரின் முன்னாள் காதலி அடையாளம் காட்டியதாக உக்ரைனின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு கொலையாளிகளே அவரை கொலைசெய்த பின்னர் காரில் தப்பிச் சென்றதாகவும், அவர்கள் சென்ற கார் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையை ரஸ்யாவின் புலனாய்வுப் பிரிவே செய்தாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யாவின் புலனாய்வுப் பிரிவு பல நாடுகளில் இவ்வாறான சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வரலாறுகள் உண்டு.

முன்னர் ரஸ்யாவின் புலனாய்வு அமைப்பான கே.ஜி.பியில் இயங்கிய அலக்சாண்டர் லிற்வினற்கொ பின்னர் பிரித்தானியாவுக்கு தப்பிவந்து ரஸ்யாவின் இரகசியங்களை பிரித்தானியாவின் வெளியக புலனாய்வு அமைப்பான எம்ஜ-6 இற்கு வழங்கி அதனுடன் இணைந்து செயற்பட்ட சமயம் 2006 ஆம் ஆண்டு ரஸ்யாவில் இருந்து வந்த இரண்டு புலனாய்வுப் பிரிவு சிறப்புப் படையினர் பொலோனியம்-210 என்ற கதிரியக்க இரசாயணம் மூலம் அவரை மிலேனியம் விடுதியில் வைத்து படுகொலை செய்த பின்னர் தப்பிச் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு இரட்டை முகவராக செயற்பட்ட ரஸ்யாவின் சேர்ஜி ஸகிரிப்பல் என்பவர் மீது நரம்புமண்டலத்தை தாக்கும் இரசயாண தாக்குதல் பிரித்தானியாவின் சலிஸ்பரி கிராமத்தில் வைத்து நிகழ்த்தப்பட்டிருந்தது. எனினும் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிர்தப்பியிருந்தார்.

இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சி.ஐ.ஏ போல ரஸ்யாவின் SVR/KGB என்ற புலனாய்வு அமைப்பும் வெளிநாடுகளில் ஊடுருவி எதிரிகளை படுகொலை செய்யும் வரலாற்றை கொண்டது.

ஆனால் தற்போதைய கொலை என்பது உக்ரைன் மற்றும் நேட்டோவின் நடவடிக்கைக்கு ஆதரவாக இயங்கி ரஸ்யாவில் நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் யாரும் எங்கும் தப்பி வாழமுடியாது என்ற செய்தியை சொல்லியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(16) ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள நிலையில் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனால் மக்சிம் கடந்த 13 ஆம் நாளே கொல்லப்பட்டுவிட்டார் ஆனால் தற்போது தான் மரணம் தெரியவந்துள்ளதாக ஸ்பெயின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

victor எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அதேசயம், கடந்த 2022 ஆம் ஆண்டு மொஸ்கோவில் வைத்து ரஸ்யாவின் புகழ்பெற்ற ஊடகவியலாளரான டறியா டுகினாவை கார் குண்டு மூலம் படுகொலை செய்த உக்ரைன் புலனாய்வுத்துறையின் பெண் உறுப்பினர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு தனது குழந்தையுடன் சென்றபோதும் ஐரோப்பாவில் ஆடம்பரவிடுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

1976 ஆம் ஆண்டு பொக்ஸ்பற் என நேட்டோவால் அழைக்கப்படும் ரஸ்யாவின் மிக்-25 இடைமறித்து தாக்கும் விமானத்தை கடத்திச் சென்று யப்பானில் தரையிறக்கிய ரஸ்யாவின் விமானியான விக்ரொர் இவனொவிக் பெலன்கொ கடந்த செப்ரம்பர் மாதம் அமெரிக்காவில் இறந்திருந்தார். அவர் இறக்கும் வரையில் அமெரிக்காவில் பாதுகாப்பாக இருந்தது போன்ற வாழ்வு எதிர்வரும் காலத்தில் யாருக்கும் கிடைக்காது என்பதை ரஸ்யா மக்சிமின் மரணம் மூலம் இரட்டை முகவர்களுக்கு உணர்த்தியுள்ளது.