உட்கட்சி முரண்பாடுகளால் தமிழ் மக்கள் ஏமாற்றத்தில் – மன்னார் ஆயர் கவலை

“தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம். ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரிய வில்லை. நாம் எமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி மன்னார் ஆயர் விடுத்த தவக்கால செய்தியிலேயே மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார். அதில், மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,

“தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பெரும் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே தொடர்கின்றது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும்
கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே, இந்நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் தொடர்ந்து நாம் செபிப்போம்.

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்போக நெல் அறுவடை நடைபெறும் இக்காலத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

வறுமைக் கோட்டுக்குக்குகீழ் வாழும் குடும்பங்கள் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் பாவனையின் தாக்கத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. மன்னார் தீவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 250 மெகாவாட் காற்றாலை சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முனைப்போடு செயல்படுகின்றது. இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து எம்மாலும் பொது அமைப்புகளாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் நாம் எமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம்” என்று அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.