உ.பி. கட்டாய மத மாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் புகார்

உத்தர பிரதேசத்தில், இஸ்லாமியரை திருமணம் செய்த பெண் ஒருவரை கணவரிடம் இருந்து பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத் தடுக்க உத்தர பிரதேச அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, லவ் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கின்றது.

இந்நிலையில், அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், திருமணம் முடிந்த ஐந்து மாதங்கள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியை ( ரஷித் மற்றும் பிங்கி) தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து குறித்த பெண் காவல்துறையினரின் வளாகத்தினுள் வைத்து மிரட்டப்படும் காணொலி சமூக வலை தளங்களில் வைரலானது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணான பிங்கி, “எனக்கு 22 வயது. எனது சொந்த விருப்பத்தின் பெயரில் கடந்த ஜீலை மாதம் திருமணம் செய்து கொண்டோம்.“ என்றார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் ரஷீத் மீதும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ரஷீத்தின் மனைவி பிங்கி, அரசு காப்பகமான நாரி நிகேதனில் தங்க வைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரதித்த அம்மாநில நீதி மன்றம், பிங்கியை மட்டும் நேற்று விடுத்துள்ளார்.

இந்நிலையில், “நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிரபராதியான எனது கணவரும், அவரது சகோதரரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

ஆனால் பிங்கியின் குற்றச்சாட்டுக் குறித்து இன்னும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.