உண்மையை உணர்த்திய உலக சுகாதார தினம் 2020 -காருண்யா

உலக சுகாதார நிறுவனத்தின் தோற்றம்-ஆயிரத்து எண்ணூறுகளின் நடுப்பகுதியில் (1859) இடம்பெற்ற பிரெஞ்சு ஆஸ்திரியா யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த வீரர்களின் உயிரிழப்புக்களும் அவலங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது. எனினும் இவ்வமைப்பு நடுநிலையாக இராணுவ வீரர்களின் நலன் பேணும் அமைப்பாக அமைந்ததன்றி இவ்வகை யுத்தங்களால் பாதிப்புக்குள்ளான மக்களின் சுகாதார நலன்களை பேணும் அமைப்பாக விரிவடையவில்லை. முதலாம், இரண்டாம் உலகப்போர்களின் பரந்துபட்ட தாக்கம்  இவ்வகை தேவையை உலகுக்கு உணர்த்தியது.

இராணுவ வீரர்களின் நலனுக்காக ஒத்துழைப்பு நல்கும் நாடுகள் மக்கள் நலன்களுக்காகவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனும் கருத்துரு தோன்றியது. இரண்டாம் உலக போரின் இறுதிக்கட்டத்தில் உலகெங்கும் நிகழ்ந்த போரினாலான மனித உயிர்களின் இழப்புக்களையும், உடமை, வளங்கள் மற்றும் பொருளாதார இழப்புக்களையும், தொடரான தொற்று நோய்களின் தாக்கங்களையும் கருத்தில் கொண்டு  உலக நாடுகளின் உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் பெயரில் 1945 இல் ஒரு உலக சுகாதார நிறுவனத்தின் தேவை வலியுறுத்தப்பட்டு, அதே ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார நிறுவனத்திற்கான இறுதி வரைபு செயலுரு பெற்றது.

இது ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்திற்கு ஆறு மாதங்களின் முன் இடம் பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் தேவையை வலியுறுத்தியதும் பல்வேறு நாடுகளை இக்கருத்துருவாக்கத்திற்கு செவிசாய்க்க வைத்ததும் எண்ணற்ற மனித உயிர்களின் இழப்பு தான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் உலக சுகாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதாபிமான கருத்துருவாக்கம் பிறந்தது என கொள்ளலாம்.

உலக சுகாதார தினம்

உலக சுகாதார நிறுவனத்தின் ஒழுங்கமைப்பு கோவை நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 7ம் திகதி ஆண்டுதோறும் உலக சுகாதார நாளாக கடைப்பிடிக்க படுகிறது. இந்நாளில் வருடம் தோறும் உலக சுகாதாரம் சார்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருப்பொருள் தேர்ந்து எடுக்கப்பட்டு, அக்கருப்பொருளினை அடைவதற்கான இலக்குகளும், செயற்றிட்டங்களும் வகுக்கப்பட்டு உலக நாடுகள் எங்கும் அவற்றை நடைமுறை படுத்த வலியுறுத்த படுவதுடன் அதற்கான அடிப்படை தொழில்நுட்ப ஆலோசனைகளும் உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது.Florence உண்மையை உணர்த்திய உலக சுகாதார தினம் 2020 -காருண்யா இவ்வகையில் இவ்வாண்டு மருத்துவ மாதுக்களையும், தாதியர்களையும் போற்றும் வகையிலும் அவர் தம் சேவைகளை மேன்மைப்படுத்தும் வகையிலும் உலக சுகாதார தினத்தை அனுசரிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டிக்கொண்டது. எனினும் புதிய கொரோனா தொற்றின் உலகளாவிய பரம்பலும் இழப்பும், தாதியர்களையும் மருத்துவ மாதுக்களையும் போற்றி மேன்மை படுத்த முடியாத அளவுக்கு உலகெங்கும் ஓர் அவசர கால நிலைமையை தோற்றுவித்துள்ளது. அவர்களை மேன்மைப்படுத்த வேண்டிய நாளில், மென்மேலும் அதிகரித்த வேலைப்பளுவை சுமக்க வேண்டிய, தம் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய அவலநிலை தான் உலக நாடுகள் அவர்கட்கு வழங்கியிருக்கிறது.    

உலக சுகாதார நிறுவனத்தின் இலக்குகளும் அடைவும்

கடந்த 75 வருடங்களில் உலகளாவிய பல தொற்று நோய்களை முற்றாக ஒழித்தமை, பல நோய்களின் தாக்கங்களை குறைத்தமை. “அனைவருக்கும் சுகாதாரம்” எனும் இலக்கில் ஓரளவு வெற்றி கண்டமை என்பன உலக சுகாதார நிறுவனத்தின் வெற்றிகளாக கொள்ளலாம். இதனை மறுதலிப்பவர்களுக்கு இன்றைய புதிய கொரோனா தொற்றும் அதன் தாக்கமும் ஓர் சான்றாக அமைகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அதீத செயற்பாடுகள் அனர்த்தனங்களால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் வளர்முக நாடுகளையே முதன்மைப்படுத்தி அமைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஐந்தாண்டு வேலைத்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தி வருவதுடன் ஆண்டுதோறும் கூடி அவற்றின் முன்னேற்றம், தடங்கல்கள் என்பவற்றை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி இலக்குகளை நோக்கி நகர்கிறது. அவ்வகையில் வரையப்பட்ட 13வது வேலைத்திட்டம், ஒரு பில்லியன் மக்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்தல், ஒரு பில்லியன் மக்களின் நல வாழ்வை உறுதிப்படுத்தல், ஒரு பில்லியன் மக்களை சுகாதார அவசர நிலைமைகளில் இருந்து பாதுகாத்தல் எனும் இலக்குடன் 2019 முதல் 2023 வரையான காலப்பகுதிக்கான இலக்குகளை வரையறுத்து செயற்றிட்டங்களை ஆரம்பித்தது.

2019 புதிய கொரோனாவும் உலக நாடுகளின் தயார் நிலையும்

பதிமூன்றாம் செயற்றிட்டத்தின் கீழ் பின்தங்கிய நாடுகளின் அவசர சுகாதார சேவைகளை மேம்படுத்தல், சமூக மற்றும் ஆரம்ப சுகாதார கட்டமைப்புகள் ஊடாக அவசர நிலைமைகளை கையாளுதல் போன்ற முன்னைய செயற்றிட்டங்களை மென்மேலும் ஊக்குவிப்பு வழங்கப்பட்டது. சீனாவில் புதிய கொரோனா தொற்று தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களில்   உலக நாடுகளுக்கான தற்காலிக வழிகாட்டல் அறிவுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியது.

அவற்றுடன் 2005ம் ஆண்டின் சர்வதேச சுகாதார நெறிமுறை கோவையை  முழுமையாக பின்பற்றுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலதிகமாக பின்தங்கிய நாடுகளுக்கான நோய்கண்காணிப்பு பொறிமுறை, ஆய்வுகூட பரிசோதனை திரவங்கள், தற்காப்பு அங்கிகள் என்பவற்றை சிறு அளவுகளில் தயார் நடவடிக்கைகளுக்காக வழங்கியது.

அவ்வகையில் பல்வேறு நாடுகள் தம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டதுடன், உலக சுகாதார நிறுவனம் தினம்தோறும் நாடுகளின் பிரதிநிதிகளூடாக தயாரிப்பு நடவடிக்கைகளை கண்காணித்தும் ஊக்கப்படுத்தியும் வந்தது. நிலைமை மோசமடைந்து போது இந்நோயை உலக சுகாதார  அவசர நிலைக்கான நோயாகவும் பின்னர் உலகளாவிய தொற்றாகவும் அறிவித்ததுடன் அவ்வவ் நிலைமைகட்கான செயற்பாடுகளை 2005ம் ஆண்டின் சர்வதேச சுகாதார நெறிமுறை மற்றும் புதிய அணுகுமுறைகளுக்கூடாக கையாளுமாறு அறிவுறுத்தியது.

 தடுமாறும் மேற்குலகும் தயாரான வறிய நாடுகளும்

இவ்வறிவுறுத்தல்களை பின்தங்கிய நாடுகள் பின்பற்றிய அளவுக்கு முன்னேறிய நாடுகள் பின்பற்றவில்லை என்பது நோயின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பரவிய போது தெரிய வந்துள்ளது. உதாரணமாக இன்று  கொரோனாவின் தாக்கம் ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கு பசிபிக் பிராந்தியம், மத்திய கிழக்கு பிராந்தியம், ஆப்பிரிக்கா எனும் ஒழுங்கில் பாதிக்கப் பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.fa உண்மையை உணர்த்திய உலக சுகாதார தினம் 2020 -காருண்யா

இந்நிலைமைக்கு என்ன காரணம்? உலக சுகாதார நிறுவனம் அதிகளவு கவனம் எடுத்து கொண்ட நாடுகளில் பரவல் குறைவாகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தம் சுகாதார மேம்பாடுகளில் தாமே கவனம் எடுத்துக் கொள்கின்றன அவர்களால் அதனை எதிர்கொள்ள முடியும் எனும் தவறுதலான புரிதலும். நோயின் தாக்கம், பரவல், விளைவுகள் என்பன சரியாக கணக்கிடப்படாமையும், எமது சுகாதார திட்டங்கள் இவ்வகை தாக்கங்களை எதிர்கொள்ளும் வல்லமை உடையனவா என்ற பரீட்சித்தல் இல்லாமையும், எல்லாவற்றிற்கும் மேலாக மெத்தன போக்கும் இன்றைய அவல நிலையை மேற்குலகிற்கு தோற்றுவித்திருக்கின்றன.

இன்று மட்டுமல்ல உலகளாவிய கொள்ளை நோய், ஸ்பானிய காய்ச்சல் மற்றும் 2009 பறவை காய்ச்சலின் போதும் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கே உள்ள மேற்குலகே அதிகளவில் பாதிக்கப்பட்டது, எயிட்ஸ் தொற்றில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

எனவே இயற்கையை மறுதலித்து, உலகளாவிய மனிதகுல மேம்பாட்டை புறந்தள்ளி, போரினாலும் பொருளாதார மற்றும் ஆயுத அச்சறுத்தலாலும் உலக நாடுகளை ஆள முனையும் மேற்குலகிற்கும் மனித குலத்திற்கும் இயற்கை மீண்டும் ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதனை மேலாதிக்க சக்திகள் கருத்தில் கொள்ளுமா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.