உணவுத் தட்டை தொட்டதனால் தலித் இளைஞன் அடித்துக் கொலை

மத்திய பிரதேசத்தில் விருந்து நிகழ்வு ஒன்றின் போது தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் உணவுத் தட்டை தொட்டதனால் 25 வயது இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சத்தர் பூர் மாவட்டம், கிஷான்பூர் கிராமத்தில் பட்டியல் வகுப்பான ‘கோரி’ சமூகத்தைச் சேர்ந்த தேவ்ராஜ் அனுராஜி, விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர்களான தேவ்ராஜின் நண்பர்கள் அபூர்வா சோனி மற்றும் சந்தோஷ் பால் ஆகியோர், கிராமத்தின் புறநகருக்கு விருந்து ஒன்றில் கலந்துகொள்ள தேவ்ராஜை அழைத்திருக்கிறார்கள்.

பின் உணவை சாப்பிடத் தொடங்கிய போது, கொலைசெய்யப்பட்ட தேவ்ராஜ் அவர்களோடு ஒன்றாகச் சாப்பிட முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு உணவுத் தட்டை எடுப்பதற்கு முயற்சித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், கவுரிஹார் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கொலை மற்றும் தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றச்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதே நேரம் அவர்களின் அடிப்படை உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. அந்த மக்களின் உரிமைகளை இந்திய மத்திய அரசு பாதுகாக்கத் தவறுவதால், அவர்கள் தொடர்ந்து உயர் சாதி என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களினால் மேலும் ஒடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.