ஈரானின் படைத்துறை ஆலோசகர் ஏவுகணைத் தாக்குதலில் பலி

இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவில் தலைநகர் டமகஸ் பகுதியில் மேற்கொண்ட மிகவும் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி படையின் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் சயீட் ராசி மௌசாவி கடந்த திங்கட்கிழமை(25) கொல்லப்பட்டுள்ளார்.

சிரியாவில் படைத்துறை ஆலோசகாரக பணியாற்றிய அவர் ஈரானின் மிகவும் தரம்வாய்ந்த கட்டளைத் தளபதிகளில் மௌசாவியும் ஒருவர். இது தொடர்பில் ஈரனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சிரியா, லெபனான், ஏமன், ஈராக் உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக செயற்பட்டுவரும் அமைப்புக்களுக்கு ஈரான் தனது படைத்துறை பயிற்சியாளர்களின் மூலம் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், ஆயுதங்களையும் விநியோகித்து வருகின்றது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈராக்கில் வைத்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயினால் எம்.கியூ-9 என்ற ஆளில்லாத தாக்குதல் விமானத்தின் மூலம் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் வெளியக படைத்துறை புலனாய்வு அமைப்பின் கட்டளை அதிகாரி ஜெனரல் குசெம் சொலைமனிக்கு நெருக்கமானவரே மௌசாவி. அந்த தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களை இஸ்ரேல் வழங்கியிருந்தது.

அதற்கு பதிலடியாக ஈராக்கில் இருந்த அமெரிக்க தளம் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 100 படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். ஈரானின் முக்கிய அதிகாரிகளை கொல்வதை அமெரிக்காவும், இஸ்ரேலும் காலம் காலமாக மேற்கொண்டு வருகின்றன. ஈரானின் அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.