ஈரானின் அணுசக்தி மையம் மீது ‘தாக்குதல்’

யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஈரான் நாட்டின் உயர் அணு சக்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து அதிகப்படியாக இஸ்ரேல் எச்சரித்து வந்ததென்றும்  2015ம் ஆண்டு ஈரானுடன் பிற நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய  அமெரிக்கா, அதை மீண்டும் செயல்படுத்த வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலால் நேற்று (ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை) தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஈரான் அணுசக்தி அமைப்பான ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஆஃப் இரான்’-ன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு தாக்குதல் நடந்து. அதில் அணுசக்தி மையத்தின் மின்சார நெட்வொர்க்குகளில் பிரச்னை ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவோ, எந்த வித கசிவோ ஏற்படவில்லை” என்றார்.

ஆனால், ஈரானின் அரசு தொலைக்காட்சி சேனலில் ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஆஃப் இரான்’-ன் தலைவர் அலி அக்பர் சலேஹியின் தரப்பிலிருந்து வெளியான ஒரு செய்திக் குறிப்பில், இது ஒரு தாக்குதல் எனவும் இது அணுசக்தி தீவிரவாதம் என்றும் “இந்த இழிவான நடவடிக்கைகளை ஈரான் கண்டிக்கிறது. அதோடு இந்த அணுசக்தி தீவிரவாதம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது”   என்று கூறப்பட்டுள்ளது.